உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 141


பெற்று என்றோ, இறைஞ்சப் பெற்று என்றோ கூறியிருக்கலாம். மாபெரும் கவிஞராகிய அடிகளார் சொற்பஞ்சம் உடையவரல்லர். அப்படியிருந்தும் அடிகள் பாடினார் என்றால், அதற்கு ஏதோ ஓர் உட்பொருள் இருத்தல் வேண்டும். சற்று நின்று நிதானித்தால் அந்த உட்பொருளையும் விளங்கிக்கொள்ள முடியும்.

இப்பொழுது குருவின் திருவடிகளை நம் மனத்தில் கொண்டு வரலாம். திருவடிகள் பருப்பொருளாக அமைந்துள்ளன. திருவாதவூரர் என்ற அமைச்சர் அந்தப் பதவிக்குரிய உடைகளுடன் அந்தத் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகிறார். இதையும் நம் மனத்தில் கொண்டுவரலாம். திருவடிகள் ஒரு பருப்பொருள்; திருவாதவூரர் உடல் ஒரு பருப்பொருள். எனவே, திருவடிகளுள் வாதவூரர் உடல் என்ற பருப்பொருள் நுழையுமாறில்லை. மேலும், திருவடிகளில் புகுதல் என்பது சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகும்.

ஆனால் கவிஞர் மிகத் தெளிவாக, 'பொலிகின்ற நின் தாள் புகுதப் பெற்று’ என்கிறாரே என்றால், புகுந்தது உண்மை. அடிகளாரின் பருவுடலையே நாம் மனத்தில் கொண்டிருப்பதால் எப்படிப் புகுத முடியும் என்ற ஐயம் மனத்தில் தோன்றுகிறது.

திருவடி என்பது வீடுபேறு என்பதன் பரியாய நாமம் ஆகும். அந்த வீடுபேற்றுக்குள் மணிவாசகர் என்பவருடைய ஆன்மா புகுந்தது உண்மை. அந்த ஆன்மாவுக்கு உரிய பருவுடல் வெளியேதான் கிடக்கிறது. திருவடிகள் என்ற பருப்பொருளும் வெளியேதான் உள்ளது. உள்ளே புகுந்த இவர் 'தேகப் பிரக்ஞை’ இல்லாதவராக, எனை நான் என்பது அறியாதவராக, சில நேரம் இருந்துவிட்டதும் உண்மை.