பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இவ்விளையாட்டின் பயன் ஒன்று உண்டு என்பதை அடிகளார் இங்குக் குறிப்பிடுகின்றார். பொதுவாக விளையாட்டில் ஏற்படும் இன்பம் விளையாடுபவனுக்கே நிகழ்வதாகும். ஆனால், இறைவன் விளையாட்டு அவனுக்கு எவ்வித இன்பத்தையோ வேறு எதனையோ தருவதில்லை. எதனாலும் பற்றப்படாதவன் ஆதலால், அவன் ஏன் இந்த விளையாட்டை நிகழ்த்த வேண்டும் என்ற வினாத் தோன்றுமன்றே? அதற்கு விடையாக, 'ஆட்கொண்டு அருளும் விளையாட்டு’ என்றார். இறைவன் ஆற்றும் ஐந்தொழில்களும் அவன் அருள் காரணமாக உயிர்களை ஆட்கொள்வதற்கே நிகழ்த்தப்பெறுகின்றன என்பது பெற்றாம்.

விளையாட்டு ஒன்றே ஆயினும் அதனால் பயன்பெறுவோர் அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே பயனை அடைவார்கள் என்பது உறுதியில்லை. அவரவர் மன நிலைக்கும் தகுதிக்கும் ஈடுபாட்டிற்கும் ஏற்ப அவர்கள் அடையும் பயன் மாறுபடுகின்றது.

அதனைக் கூறவந்த அடிகளார் 'உய்வார்கள் உய்யும் வகை எல்லாம்' என்று கூறினார். உய்பவர்கள் பலராயினும் ஒருவர் பெற்ற உய்வு மற்றவருடைய உய்வைப்போல் அன்று என்பது பெற்றாம். ஒரே உயிர் பிறவிகள்தோறும் இந்த உய்வைப் பெற்று, மேலும் மேலும் வளர்ச்சியடைகின்றது என்பதை ‘வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்’ என்று கூறினார்.

இதிலும் ஒரு சிறப்புண்டு. படைத்தல் முதலிய தொழில்கள் அனைவருக்கும் பொதுவாகவே நடைபெறுகின்றன. அவனுடைய அருளும் பொதுவாகவே அனைத்து உயிர்களுக்கும் வழங்கப்பெறுகின்றது. அப்படியானால் இந்த உயிர்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அந்த அருளைப் பெற்று உய்யலாமே என்றால், அது இயலாத காரியம் என்கிறார். ஆறு நிறையத் தண்ணீர்