பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 251


இதனைப் பெறவேண்டும் என்று நினைத்தால், அது இயலாத காரியம் என்பதை அனைவரும் அறிவோம். நான்முகன், தேவர்கள் முதலியோர்க்கும் கிட்டாத, இன்பம் என்றால், அந்த இன்பத்தைத் தருபவன் அவர்களையும் தாண்டி எங்கோ மேலே இருக்கின்றான், இன்பத்தைப் பெறுமாறு எங்ஙனம் என்று வருந்துவோமல்லவா? வருந்தும் நம்மை நோக்கி ‘அஞ்ச வேண்டா; அவரவர்கள் வீடு தேடி எழுந்தருளி வந்து அவனே அதைக் கொடுக்க முன்வந்துள்ளான்' என்று கூறுகிறார் அடிகளார்.

மிகச் சிறந்த இனிய உணவாயினும் மஞ்சட் காமாலை நோயுடையார் அதனைச் சுவைத்து உண்ண இயலாது. அவ்வாறு உண்ண வேண்டுமாயின் முதலாவதாக அந்நோயைப் போக்க வேண்டும். அதேபோல அறுவகைக் குற்றங்களையும் மனத்தில் நிரப்பிக்கொண்டு உழலும் நமக்கு, நம் வீட்டுப் படியேறி வந்து எங்கும் இலாத இன்பத்தை அவன் தந்தாலும், அதனை அனுபவிக்க முடியாது. எனவே, வைத்திய நாதனாகிய அவன் நம்முடைய நோயை முதலில் போக்குகிறான் என்ற கருத்தைக் 'கோதாட்டி' என்ற சொல் மூலம் அடிகளார் பெற வைக்கிறார். 'இல்லங்கள்தோறும் எழுந்தருளி, நம் தம்மைக் கோதாட்டி எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாச்' செய்கின்றான்.

172. அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண் ஆர் ஒளி மழுங்கித் தாரகைகள்தாம் அகலப்
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய்ப் பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகிக்
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 18