உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாதுரை

15

நேரிட்ட பிரம லீலையைக் கவனியுங்கள் இவர் சிருஷ்டி கர்த்தர்; இவரைப் பூஜிக்க வேண்டும். அந்த பூஜைக்குப் பெயர் பக்தி இதை ஒப்புக்கொள்வாரா ஒரு சொட்டு மானமும் ரோசமும் பகுத்தறிவும் உள்ளவர்கள்? பிரம புராணத்திலே எழுதப்பட்டிருக்கிறது மற்றோர் லீலை கௌரிகல்யாணம் நடந்ததாம். அதனைக்காணச் சென்றாராம் பிரமன். கெளரியைக் கண்டார்; காமங் கொண்டதுதான் தாமதம், விளைவு வீறிட்டது. உடனே தோன்றினராம் வாலகில்லிய இருடிகள். எப்படிபிரமனின் பெருங்குணம்! பெண்களைக் கண்ட உடனே இப்பெருங்குணவானுக்கு தோன்றும் காமம், அதன் விளைவு ஆகியவற்றைக் கூறிவிட்டு, இப்படிப் பட்டவரை ஏத்தி ஏத்தித்தொழுவோம் யாமே என்றும் கூறுகிறார்களே புராணத்தைப் பேசி, அக்கற்பனைகளைப் பூஜிக்கும் மதவாதிகள். இவர்கள், எதை மதிக்கிறவர்களாகிறார்கள்? தெய்வத்தை? தீயசெயல் புரிவோன் தெய்வமல்லவே! தீய செயலைச் செய்ததாகக் கதையும் கூறிவிட்டுப் பிறகு, அச்செயலினனைத் தெய்வமென்று கூறினால், மதி தேய்ந்தவர் தவிர மற்றையோர் ஏற்பரோ? ஊர்வசி ஆடினாலும், திலோத்தமை பாடினாலும், பார்வதி கண்ணிலே பட்டாலும், கௌரியைக் கண்டாலும், மகளே எதிர்ப்பட்டாலும் இந்த மகானுபாவனுக்குக் காமவெறி பிடித்து விடுகிறது. இப்படிப்பட்ட காமிவெறிபிடித்தலையும் “கடவுள்கள்" யாருக்குத் தேவை என்று கேட்கிறோம்.