பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

27



கொள்ளவும் முயல்கின்றனர். அந்த மனக் காயத்தை, உணர்வுகளும் நினைவுகளுமே ஆற்றுகின்றன. எப்படி?

கிராமத்துப் பெண்ணொருத்தி, ஒரு பட்டணத்து வாலிபனை மணந்து கொண்டு அவன் வீட்டுக்கு வருகிறாள். வந்ததும் வராததுமாக அவளை வரவேற்றது மாமியாரோ உறவினரோ அல்லள். வீட்டைச் சுற்றிப் பரவிக் கிடந்த சாக்கடை நாற்றமே. அவள் வீடு சாக்கடை ஒரத்தில் கட்டப்பட்ட ஒரு குடிசை.

முகஞ்சுளித்த புது மணப்பெண், அக்கம்பக்கம் பேசினாலும் ஆசைக் கணவனிடம் கொஞ்சினாலும் கூட அந்த சாக்கடை நாற்றத்தை சகிக்க முடியவே இல்லை என்றே சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். கேட்டவர்கள் அதற்குப் பதிலே கூறவில்லை. அவளுக்கு அது தன்னை அவமானப்படுத்துவது போலிருந்தது.

பத்து நாள் போனதும், அவள் அக்கம்பக்கத்தாரிடம் போய், பார்த்தீர்களா! நானும் இந்த வீட்டுக்கு வந்தேன். நாற்றமும் போய்விட்டது என்று கூறி மகிழ்ந்தாளாம். அவளது அறியாமையைக் கண்டு அனைவரும் சிரித்தனராம்.

நாற்றத்தினிடையே வாழ்ந்த அவனது நாசி, நாற்றத்தை ஏற்றுக் கொண்டதால் நாற்றமே தெரியவில்லை என்பது போல, தொந்தியின் சுமையைத் தாங்கித் தாங்கி அனுபவித்தவர்கள் கூட, நமக்கு ஒன்றும் அவ்வளவு பெரிதாகத் தொந்தி இல்லை. இது ஒன்றும் அவ்வளவு அசிங்கமாக இல்லை என்றெல்லாம் தமக்குள்ளே பேசி சமாதானம் செய்து கொள்கின்றனர்.