பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நல்ல தீர்ப்பு

கிள்ளை: நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின்,

மக்களில் தன்னை உயர்ந்தவன் என்று கூறுகின்ற கொடியோன் செய்யும் கொடுமை செய்தவள் ஆவேன்.
நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறு வேனாயின், உழுதவனைக் கூலிக்காரன் என்று கூறி உழுதவனைத்தான் பறிக்கும் முதலாளி செய்யும் தீமையைச் செய்தவள் ஆவேன்.
நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின், தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழால் ஊழியம் பெற்றுத் தமிழையன்றி அயல் மொழியை ஆதரிக்கும் சழக்கன் செய்யும் சழக்குச் சூழ்ந்தவள் ஆவேன். நான் இந்த அறமன்றத்தின் முன் மெய்யே கூறுவதாக உறுதி கூறுகிறேன்.

அரசர் : கிள்ளாய் நீ அந்த மாணிக்கக் கணையாழியை எடுத்ததுண்டா?

கிள்ளை : நான் எடுத்ததில்லை பேரரசே!

அரசர் : அக்கணையாழி இப்போது உன்னிடமோ, உன்னால் பிறரிடமோ இல்லையா?

கிள்ளை : என்னிடம் இல்லை. நான் அதைப் பிறரிடம் கொடுத்து வைத்ததும் இல்லை பேரரசே!

அரசர் : சாலி இதுபற்றி உனக்கென்ன தெரியும்?

சாலி : கிள்ளை வைத்திருக்கக் கண்டேன்

அரசர் : என்றைக்கு?

சாலி : நேற்று

அரசர் : நேற்று அரண்மனைக்குப் போனதுண்டா?

சாலி : நானும் கிள்ளையும் போனதுண்டு.

அரசர் : என்ன வேலை?

சாலி : இளவரசி முல்லைக்கு நாங்கள் தோழிகள்.

அரசர் : இவை மெய்தானா கிள்ளாய்?