பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

113


குறைய 2 மணி ஆயிற்று. “லீலாவதி-சுலோசனா"வைப் போல் அத்துணைப் பெரிய நாடகமாயில்லாவிட்டாலும், ஐந்து மணி நேரம் பிடித்தது. இப்பொழுது இந்நாடகத்தை எங்கள் சபையோர் ஆடுவதென்றால் ஏறக்குறைய நான்கு மணிக்குள் முடித்துவிடலாம் என்று தோன்றுகிறது. அப்பொழுது அத்துணை நாழிகை பிடித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அக் காலம் ஒவ்வொரு காட்சி முடிந்தவுடன், இன்னொரு காட்சி ஆரம்பிப்பதற்கு முன் டிராப் படுதாவை விட்டு பின் நடக்க வேண்டிய காட்சிக்காக நாடக மேடையில் ஏற்பாடு செய்வது வழக்கம். இப்பொழுதும் சில சமயங்களில் சில காட்சிகளுக்கிடையில் அவ்வாறு செய்தபோதிலும் பெரும்பாலும் அவ்வழக்கத்தை விட்டோமென்றே சொல்லலாம். பார்சி நாடகக் கம்பெனியார் முதல் முதல் சென்னைக்கு வந்து, ஒரு நாடகத்தில், இரண்டு மூன்று முறை டிராப் படுதாவை விட்டு அவகாசம் கொடுக்கும் வழக்கத்தை சென்னையிலுள்ள நாடகக் கம்பெனிகளுக்குக் கற்பித்தனர் என்றே சொல்ல வேண்டும். இவ் வழக்கத்தை அனுசரித்தால் நலமாயிருக்குமென்று தோற்றுகிறதெனக்கு. நாடகங்கள் எழுதும் பொழுதே, இதற்குத் தக்கபடி நாடக ஆசிரியர்கள் எழுதி வந்தார்களானால் மிகவும் நலமாயிருக்கும். மேடையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய இரண்டு பெரிய காட்சிகளுக் கிடையில், ஏற்பாடுகளில்லாத-திரை மாத்திரம் விட வேண்டிய ஒரு சிறிய காட்சியை அமைத்து, எழுதி வருவார்களானால், நாடகமாடும் பொழுது, காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் அதிக அவகாசம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல், நாடகமானது விரைவில் நடந்தேறி, சீக்கிரம் முடிவு பெறும் நான் பிற்காலத்தில் எழுதிய நாடகங்களில் பெரும்பாலும் இம் முறையை அனுசரித்திருக்கிறேன்.

இக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தில் காட்சிகளில் செய்ய வேண்டிய “சீனிக் அரேன்ஜ்மென்ட்ஸ் ” (Scenic arrangements) என்று சொல்லப்பட்ட நாடக மேடை ஏற்பாடு களை எல்லாம், எனது நண்பர்களாகிய ஸ்ரீனிவாச ஐயங்காரும், ஸ்ரீனிவாசபாய் என்பவரும் தலைமேற்கொண்டு வெகு விமரிசையாய்ச் செய்தனர். அவ்விருவரும் இன்னும் எனது இதர நண்பர்களுடன் “லீலாவதி- சுலோசனா” நாடகத்தைப்