பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

573


கரகோஷம் செய்திருக்கின்றனர். ஆயினும் அவர் அச்சமயம் கூறிய அவ்வொரு வார்த்தையானது அவைகளெல்லாவற்றையும்விட எனக்கு அதிக உற்சாகத்தைத் தந்தது.

ஆயிரம் பேர் சாதாரண ஜனங்கள் புகழ்வதைவிட, ரசிகன் ஒருவனுடைய புகழ்ச்சியே மேலாக மதிக்கப்படும் என்பதற்கு இதை ஓர் உதாரணமாக இங்கு என் அனுபவத்தில் எழுதினேன்.

இங்கு மனோஹரா நாடகத்தை நடத்தியதில் ஒரு விசேஷம் உண்டு. நாடக தினம் காலை, இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகமாகிய பத்மாவதி தேவி வேடம் தரிக்கவேண்டிய எம். தேசிகாச்சாரியார் என்பவருக்கு 105 டிகிரி ஜுரம் வந்துவிட்டது. அவருக்குப் பித்தம் அதிகப் பட்டு, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஸ்மரணை தப்பிப் பேச ஆரம்பித்துவிட்டார்! இந்த ஸ்திதியிலிருக்கும் ஆக்டரை இரவில் பத்மாவதி வேடம் பூணச் செய்வது எப்படி என்று மனங் கலங்கியவனாய் யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், சாயங்காலம் 4 மணிக்கு, பிறகு நடக்க வேண்டிய நாடகங்களில் ஆடுவதற்காக, தற்காலம் என்னுடன் ஸ்திரீ வேடம் பூண்டாடும் எனது பிரிய நண்பர் கே.நாகரத்தினம் ஐயர் அகஸ்மாத்தாய் வந்து சேர்ந்தார். வந்தவுடன் தேசிகாச்சாரியார் இருக்கும் நிலைமையை அவருக்குக் கூறி, எப்படியாவது ஆபத்தில் உதவ வேண்டுமென்று சொல்லி, அவருக்குப் பத்மாவதியின் பாகத்தை ஒருமுறை படித்துக் காண்பித்தேன். அவரும் ‘ஆகட்டும்.’ என்று இசைந்து அப்பொழுதிருந்த இரண்டொரு மணி சாவகாசத்திற்குள்ளாக அத்தனை பெரிய பாகத்தை சற்றறேக்குறைய குருட்டுப் பாடம் செய்துவிட்டு, அன்றிரவு, பத்மாவதியாக மிகவும் நன்றாய் நடித்து எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றினார். இவர் இங்ஙனம் கைகொடுத்திராவிட்டால், அன்று நாடத்தை நிறுத்தியாக வேண்டியிருக்கும் அல்லது ஆபாசமாகவாவது முடிந்திருக்கும். இவரைப் பற்றிப் பிறகு நான் அதிகமாக எழுத வேண்டி வரும்.

இந்த மனோஹரா நாடகம் நடந்தபொழுது, தற்காலம் ராஜா என்கிற பட்டப் பெயரைப் பெற்று, தமிழ் பாஷையின் அபிவிருத்திக்காகவே முக்கியமாக, “அண்ணாமலை