பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

613


அரங்கத்தின் மீதிருந்தார். ஆயினும் ஆக்டர்கள் ஆடும் இடத்திலில்லை; பக்கப் படுதாவின் பக்கத்தில், கண்டக்டராகத் தன் ஆயுளை எந்த வேலைக்காக அர்ப்பணம் செய்தாரோ, அந்த வேலையைப் பார்த்துக்கொண்டு!” இம்முறை நான் கண்டக்டராகப் புஸ்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஆக்டர்கள் மறந்து போகும் இடத்தில் அவர்கள் பாகங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது, இதற்கு முன்பாக திருநெல்வேலியில் இந்நாடகம் ஆடினபொழுது அனுபவித்த துயரத்தைவிட, நூறு பங்கு துயரம் அதிகமாய் அனுபவித்தேன்; திருநெல்வேலியில் மறுபடி எனதுயிர் நண்பரை இவ்வுலகில் சீக்கிரம் காண்பேன் என்னும் ஆறுதல் இருந்தது; இம்முறை அந்த ஆறுதலும், ஆசையும் அடியுடன் அற்றவனாயிருந்தேன்!

இம்முறை டிசம்பர் விடுமுறைக் காலத்தில் எங்கள் சபை எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு ஆடிய பாத்திரங்களுள்ள நாடகங்கள் ஆடுவதில் நேர்ந்த முக்கியமான கஷ்ட மென்னவென்றால், அப் பாத்திரங்களை எடுத்துக்கொள்ள மற்ற ஆக்டர்கள் பெரும்பாலும் அஞ்சினர் - அவர் நன்றாய் நடித்த பாகங்களை நாம் அவரைப்போல் நடிக்காவிட்டால், சபையோர் எல்லாம் அப்படியில்லை என்று குறை கூறுவார்களே யென்று; நாடகங்களைப் பார்க்க வந்த சபையோர்களும் அப்படியே சொல்லித் தீர்த்தனர். முன்பு கூறிய எனது நண்பர் சுந்தரவரத ஐயங்கார் மேற்சொன்ன பத்திரிகையில் “காலவ ரிஷி” என்னும் நாடகத்தைப் பற்றி எழுதியபொழுது அடியில் வருமாறு வரைந்தனர்: ‘இம் முறை சுபத்திரை வேடம் பூண்ட எம். ராமகிருஷ்ண ஐயர், தௌர்ப்பாக்கியத்தால் சிறு வயதிலேயே மரணமடைந்த சி. ரங்கவடிவேலு மிகவும் விமரிசையாய் இப் பாத்திரத்தை நடித்தபடி, தானும் முயன்று பார்க்க வேண்டியதாயிற்று; அன்று சபையில் வந்திருந்தவர்களுள் ஒருவராவது அவர் நடிப்பதற்கில்லாமல் போயிற்றே என்று வருந்தாமல் இல்லை!” என்று எழுதினர்.

1924ஆம் வருஷம் நடந்த எங்கள் சபையின் நிகழ்ச்சிகளுள், சில துக்ககரமானவை, சில சந்தோஷகரமானவை. இவ்வருஷம் எங்கள் சபையின் பேட்ரன் ஆக இருந்த சர். சுப்பிரமணிய ஐயர் காலமானார். அன்றியும் எனது பழைய