பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

618

நாடக மேடை நினைவுகள்


பற்றி ஒரு உபன்யாசம் செய்தார். இவர் அன்று எடுத்துக் கூறிய விஷயங்களை ஆதாரமாகக் கொண்டே சில வருடங்களுக்குப் பிறகு, சென்னை சர்வகலா சங்கத்தார் ஆதரவின்கீழ், நாடகத் தமிழைப்பற்றி மூன்று உபன்யாசங்கள் பச்சையப்பன் கலாசாலையில் நான் செய்தேன். இது அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இனி இவ் வருடம், நாடக மேடையின்மீது மறுபடியும் கதாநாயகன் வேடம் பூணுவதில்லை என்று தீர்மானித்த நான், அத்தீர்மானத்தினின்றும் வழுவி, மறுபடியும் முக்கிய வேடம் பூண்ட கதையை எழுதுகிறேன்.

இவ்வருஷம் நவம்பர் மாதம் 23ஆம் தேதி அதிவிருஷ்டியினால் தென் இந்தியாவின் சில பிரதேசங்களில் ஜனங்கள் அடைந்த மிகுந்த கஷ்டத்தை நிவாரணம் செய்வதற்காக ஏற்படுத்திய பண்டிற்காக எங்கள் சபையில் ஒரு நாடகம் நடத்தி, அதன் வரும்படியை அந்த பண்டிற்குக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். அதற்காக ஒரு தெலுங்கு நாடகம் நடத்த வேண்டுமென்றும், அதன் பொருட்டு பல்லாரியிலிருந்து எனது நண்பராகிய ராகவாச்சார்லு அவர்களை வரவழைக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தோம். அந்நாடகத்தைச் சென்னை கவர்னர் அவர்கள் ஆதரவிலும் முன்னிலையிலும் நடத்த வேண்டுமென்று அவரைக் கேட்க அவரும் இசைந்தார். இவ்வாறு எல்லா ஏற்பாடுகளும் செய்தான பிறகு, திடீரென்று எட்டுப் பத்துத் தினங்களுக்கு முன்பாக பல்லாரியிலிருந்து ராகவாச்சார்லு அவர்கள்தான் அந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னைக்கு வந்து நாடகமாட ஏதோ அசந்தர்ப்பத்தினால் முடியாதென்று தெரிவித்தார். அந்த சமாச்சாரத்தைக் கேட்டவுடன் எங்கள் சபையின் அங்கத்தினர் மிகவும் மனங்கலங்கினர்; அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லையென்றே நான் சொல்ல வேண்டும். ராகவாச்சார்லுவின் மீது நான் குற்றங் கூறவில்லை. ஏதோ மிகுந்த அசந்தர்ப்பமாயிருந்தபடியால் தான் வருவதற்கில்லையென்று தெரிவித்திருக்கிறார்; ஆயினும் அவர் ஒருவர் வர முடியாதபடியால், நம்முடைய சபை ஏற்றுக்கொண்ட தர்ம கைங்கர்யத்தையே கைவிடவேண்டி யிருக்கிறதல்லவா என்று துக்கித்தேன். எனதாருயிர் நண்பர் உயிருடனிருந்தால், மறுநாளே வேண்டினும் ஏதாவது