பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

679


வேண்டியது நமது கடமைதானே” என்று அவர்களுக்குச் சமாதானம் சொன்னேன். என்ன சொல்லியும் அவர்களில் அநேகர் திருப்தி அடையவில்லை; உண்மையைக் கூறுமிடத்து, எனக்கும் கடைசி வரையில், இவ்வாறு நாம் மற்றொரு சபையில் நடிப்பது நியாயமா, தவறா என்கிற சங்கை பாதித்துக் கொண்டிருந்தது. தமிழ்ச் சங்கங்களிருந்த மதுரை மாநகர்மீதும், அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் மீதும் எனக்குள்ள ப்ரீதியை முன்பே - இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். ஆகவே கடைசியாக, நாம் இப்படிச் செய்வது நமது சுய நன்மைக்காக ஒன்றுமில்லை, தமிழ் நாடக மேடைக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைக்காகவும்தானே இப்படி செய்கிறோம்; ஆகவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாரம், என்று அவர்கள் தலையில் இதைச் சுமத்தி, மதுரைக்குப் புறப்பட்டு நாடக தினத்திற்கு நான் ஐந்து நாள் முன்பாகப் போய்ச் சேர்ந்தேன். மதுரை டிராமாடிக் கிளப்பார், இங்கு “காலவ ரிஷி", “இரண்டு நண்பர்கள்” என்னும் இரண்டு நாடகங்களையும் ஆட வேண்டுமென்று நாகரத்தினம் ஐயருடன் கலந்து பேசித் தீர்மானித்தார்கள்; அதற்கு நானும் சரிதான் என்று சம்மதித்தேன்.

மதுரைக்குப் போய்ச் சேருமளவும், புதிய ஆக்டர்களுடன் சேர்ந்து நடிக்கிறோமே, அவர்கள் எல்லாம் சரியாக நடிப்பார்களா? நம்முடன் ஒத்து உழைப்பார்களா? நாடகங்கள் சரியாக நடிக்கப்பட்டு ஜனங்களை சந்தோஷிக்கச் செய்யுமா? நாடகமாடுவதில் நானும் எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் இதுவரையில் எடுத்திருந்த சிறிது பெயர் கெடாமலிருக்குமா? நாடகங்களுக்குச் சரியாகப் பணம் வசூலாகுமா?’ என்கிற பல சந்தேகங்கள் என் மனத்தைப் பாதித்தன. முக்கியமாக அவற்றுள் கடைசியாக எழுதிய சந்தேகம்தான் என்னை மிகவும் வாட்டியது; இந் நாடகங்களினால் மதுரை டிராமாடிக் கிளப்பாருக்கு, நஷ்டம் நேரிட்டால், ஏதோ கொஞ்சம் பெயர் பெற்ற ஆக்டர்களென்று இவர்களை வரவழைத்தோமே, இவர்களால் நமக்கு நஷ்டம் நேரிட்டதே என்று அவர்களும் வருத்தப்படக் கூடாது; சென்னை