உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228 ♦ நான் கண்ட பெரியவர்கள்



இளமையிலேயே நுண்மான் நுழைபுலமும் ஆழ்ந்து கற்கும் இயல்புமுடைய பெரும் பேச்சாளர் முனைவர் அசோக்குமார் அவர்கள்.

ஈரோடு வாசியான இவர் வாழ்நாளில் பெரும் பகுதியை அரசியலில் செலவழித்துவிட்டு, சிவ பூஜா துரந்தரர் தங்கவேலு அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் பெருவேகத்தோடு பெரியபுராணத்துள் புகுந்தார். நாயன்மார்கள் பிறந்த ஊர்களையெல்லாம் சென்றுகண்டு படமெடுத்து நூல்வடிவு கொடுக்கும் முயற்சியில் முனைந்துள்ளார். அவர்தான் பெரும் பேச்சாளர் த. விசுவநாதன் அவர்கள்.

கம்பனையே வழிபடு தெய்வம்போல் போற்றும் ஒருவர், சைவசித்தாந்தத்திலும் மிக ஆழமாக ஈடுபட்டுக் கம்பனிலும் பெரிய புராணத்திலும் ஈடுஇணையற்ற முறையில், தம் தாய் நாட்டிலும் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் சென்று பேசும் பிரம்மச்சாரி இன்றைய பெரும் பேச்சாளர்களுள் ஒருவராகத் திகழும் இலங்கை ஜெயராஜ் அவர்கள்.

பல்கலைக் கழக மாணவராக இருக்கும்பொழுதே கூட ஒப்பற்ற தம் பேச்சாற்றலால் அனைவரையும் கவரும் ஆற்றல் மிக்க பேச்சாளர் ஆகவும், இலங்கைக் கம்பன்கழகத்தின் அமைப்பாளர் ஆகவும் இருப்பவர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்கள்.

சைவ இலக்கியங்களில் மிக்க ஈடுபாடு கொள்வதுடன் சிறப்பாகக் கந்தபுராணத்தில் நல்ல ஈடுபாடுகொண்டு சிறந்த முறையில் பேசும் ஆற்றல் மிக்கவர் இலங்கை த. சிவகுமார் அவர்கள்.

தமிழ்த்துறையில் பயிலவோ பணிபுரியவோ இல்லாமல் பிறதுறைகளில் பயின்று நல்ல பதவிகள் வகிக்கும் ஒரு சிலர் ஆழ்ந்த தமிழ்க்கல்வியும் மிகச்சிறந்த பேச்சாற்றலும் பெற்று