பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்‌ தொகுதி / ஆத்மாவின்‌ குரல்‌ ★ 233



ஓவ்வொருவராக அவருடைய பாதத்தைத்‌ தொட்டு வணங்கினார்கள்‌. பூஜை செய்த அட்சதையை எடுத்து, ஒவ்வொருவர்‌ தலையிலும்‌ தெளித்து, ஆசீர்வதித்தார்‌.

“புகழும்‌ பொருளும்‌ பெருகி நன்றாக வாழுங்கள்‌!”

அருள்நந்தி எல்லோரையும்‌ வாழ்த்தினார்‌.கற்பூர தீபாராதனை காட்டிப்‌ பூஜையை முடித்தார்‌.

சிஷ்யர்கள்‌ இந்த நல்ல சமயத்தை நழுவவிடக்கூடாதென்று ஒவ்வொருவராக அவரவர்கள்‌ கொண்டு வந்திருந்த காணிக்கைப்‌ பொருள்களைப்‌ பிரித்து வெளியே எடுத்தனர்‌.

பட்டுப்‌ பை நிறையப்‌ பொற்காசுகளைக்‌ கொண்டு வந்திருந்த சிஷ்யர்‌ பையை அவிழ்த்துக்கொண்டு, அருள்நந்திக்கு அருகே சென்றார்‌.

அருள்நந்தி அப்போது தியாகராஜ சுவாமிகள்‌ படத்தில்‌ நழுவி விழுந்து மறைத்த பூமாலையைச்‌ சரி செய்துவிட்டு ஆசனப்‌ பலகையிலிருந்து எழுந்திருக்க இருந்தார்‌.

“அண்ணா! அப்படியே கொஞ்சம்‌ உட்கார வேண்டும்‌.”

“என்னடா அது?”

“ஒன்றுமில்லை! ஏதோ என்‌ சக்திக்கு இயன்றது. அண்ணாவுக்குக்‌ கனகாபிஷேகம்‌ செய்துவிட வேண்டுமென்று எனக்கு ஆசை! அதுதான்‌...”

குத்து விளக்கொளியில்‌ பட்டுப்‌ பை நிறையச்‌ சல்லி சல்லியாகப்‌ பொற்காசுகள்‌ ஜொலித்தன. அருள்நந்தியின்‌ முகம்‌ ‘ஜிவ்‌'வென்று சிவந்தது. கண்களில்‌ நெருப்புப்‌பொறி பறக்க, புருவங்கள்‌ வளைந்து நிமிர, உதடுகள்‌ துடிக்க, அவேசம்‌ வந்தவர்‌ போல ஆசனத்திலிருந்து துள்ளிக்‌ குதித்து எழுந்திருந்தார்‌ அவர்‌.

“அடே! பாவீ! இதென்ன காரியம்‌ செய்கிறாய்‌? என்‌ சங்கதத்திற்கு விலையா? இந்த உலகம்‌ முழுவதும்‌ கொடுத்தாலும்‌ ஈடில்லாத கலையடா அது! போ... போய்‌ விடுங்கள்‌. வெளியேபோகிறீர்களா? அடித்துத்‌ துரத்தட்டுமா? நீங்கள்‌ கொண்டு வந்தவற்றில்‌ ஒரு துரும்புகூட இங்கே வைத்துவிட்டுப்‌ போகக்கூடாது. தெருவில்‌ தூக்கி எறிந்துவிடுவேன்‌!” இடி இடிப்பது போன்ற குரவில்‌ இரண்டு கைகளையும்‌ மறித்து ஆட்டிக்‌ கொண்டே, கூப்பாடு போட்டார்‌. அப்போது அவரைப்‌ பார்ப்பதற்கே பயமாக இருந்தது. கால சம்ஹார மூர்த்திபோல்‌ நெற்றிக்கண்‌ திறந்து, கனல்‌ வீசி நிருத்தமிடும்‌ கூத்தன்போல்‌ குதித்தார்‌ அவர்‌.

பட்டுப்‌ பையில்‌ தங்கக்‌ காசுகளோடு கனகாபிஷேகம்‌ செய்ய வந்த சிஷ்யர்‌ பயந்து பின்‌ வாங்கினார்‌. மற்றவர்கள்‌ திகைத்துத்‌ தயங்கி நின்றார்கள்‌.

“அற்பப்‌ பயல்களா! அதோ, தியாகராஜ சுவாமிகளின்‌ படத்திற்குமேல்‌ என்ன எழுதியிருக்கிறது பாருங்களடா!” அருள்நந்தி வெறி கொண்டவர்போல கத்தினார்‌.

“போகிறீர்களா இல்லையா? ஒரு நிமிஷம்‌ தாமதித்தீர்களானால்‌ கொலை விழுந்துவிடும்‌ இங்கே?” கத்திக்‌ கூச்சலிட்டுக்‌ கொண்டே,பூஜையறைக்கு வெளியே