பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வழிகள் பிரிகின்றன 399

"அதில்லை ஐயா!'ந'னாக்கு'னாவுக்குச் சம்சாரம் காலமான நாளிலேருந்து இந்தப் பொண்ணு காந்திதான் தம்பியைக் கவனிச்சு வளர்த்தது. இவ புருசன் வீடு போயிட்டால் அந்தக் குருட்டுப் பையனைக் கவனிக்க இங்கே யாரிருக்கா?” என்றார் ஒருவர். மாடியில் குருட்டுப் பையனைச் சமாதானப்படுத்தப் போன தந்தையையும் மணமகளையும் துரிதப்படுத்த அத்தான் பலவேசம் ஓடினார்.

பெண்ணும், பெண்ணைப் பெற்றவரும் மணவறைக்கு வந்தார்கள். பையனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பலவேசத்தின் கையிலே ஒப்படைக்கப்பட்டது. திருப்பூட்டு முடிகிற வரை பையனைப் பார்த்துக் கொண்டார் அவர்.

காந்திமதி மத்தியானம் ஒரு மணிக்கு மேல் மணவறைச் சடங்குகளெல்லாம் முடிந்துமாடிக்குப் போனாள்.கீழே முதல் பந்தி, இரண்டாம் பந்தி என்று சாப்பாட்டுக் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது.

“கண்ணா! நீ தங்கமான பையன். மத்தியானம் அப்படி அழலாமா? அக்காவுக்குக் கலியாணம்னா தம்பி சந்தோஷமா இருக்க வேண்டாமா?”

"அக்கா! உனக்குக் கலியாணம்னு எங்கிட்ட நீ சொல்லவேயில்லியே? இப்பிடி நீ என்னையை ஏமாத்தலாமா? கண்ணன் விசும்பினான்.

"உன்னை ஏமாத்துவேனாடா கண்ணு? எனக்குக் கலியாணம்னு நானே சொல்லிக்கலாமா?”

“ஏன் எங்கிட்டே சொன்னா என்னவாம்?”

“சொல்லாதது தப்புத்தாண்டா, மன்னிச்சிடு.”

"இனிமே நீ இந்த வீட்டிலே இருக்க மாட்டியா அக்கா?”

“ஏண்டா இப்படிக் கேட்கறே?”

“இல்லேக்கா, இங்கே யாரோ பேசிக்கிட்டாங்க நான் கேட்டேன்.”

காந்திமதிக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. புதுப் புடவையால் துடைத்துக் கொண்டாள். ஏதேதோ நினைவுக்கு வந்தது அவளுக்கு.தாயின் மறைவு, நினைவறியாப் பருவத்திலிருந்து அந்தக் குருட்டுத் தம்பியைத் தாங்கித் தாங்கிச் செல்லமாக வளர்த்த நாட்கள், வீட்டில் தங்கி வீட்டைக் கவனிக்க வசதியில்லாமல் ஊரூராக அலைய வேண்டிய தந்தையின் தொழில் எல்லாவற்றையும் நினைத்து பார்த்த் போது அவளுக்கு வேதனையாக இருந்தது.அன்று வரை கண்களில்லாத அந்தக் கண்ணனுக்கு அவளே கண்களாக இருந்து வளர்த்து விட்டாள். பல் தேய்த்து விட்டு வெந்நீர்ப் பழையது பிசைந்து போடுவதிலிருந்து, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது வரை எல்லாம் பொறுமையோடு பாசத்தோடு செய்து வளர்த்து விட்டாள். . ‘இனிமேல் யார் செய்வார்கள்? - நினைக்கவே இயலாத கேள்வியாக இருந்தது. இது.

"அக்கா! நானும் உன்னோடேயே வந்திடுவேன். இப்பல்லாம் அப்பா ரொம்பக் கோபிக்கிறாங்க.. காலைலே நீயுங் கேட்டுக்கிட்டிருந்தியே, ஏலே குருட்டு