பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / அர்த்தம் பிறந்தது 515

போன்ற நிறத்தில் கொடியுடலும், சுருண்டகேசமும், பட்டுச் செவ்விதழ்களும், முத்துப் பல்வரிசையுமாக லில்லி வோட்ஹவுஸ் என்ற பெண் அவரைக் காதலித்த சமயம்தான் அது. அவள் இருந்தவரைதான் அந்தக் காவியானுபவத்துக்கு அர்த்தமும் இருந்தது. இப்போது நினைவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுக்கு எந்த அர்த்தமும் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதைப் போலவே ஒரு காலத்தில் எமரால்டு என்ற வார்த்தைக்குக் காவியமயமாக அவர் கண்ட அர்த்தமும் இப்போது அவருக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் அந்தக் கருநீலப் பச்சை மலைவெளி இன்றும் அப்படியே மறையாமல் இருக்கிறது. ஆம்! அந்த மலைகளைத் தூரத்திலிருந்து பார்க்கும் போது அவற்றில் நிச்சயமாக ஒரு நிறம் தெரியவில்லை.கருமை, நீலம், பசுமை மூன்றும் கலந்து மொத்தத்தில் ஏதோ ஒரு நிறமாகத் தெரிகின்றன. அது கவர்ச்சியாயிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் அழகாகவும் இருக்கிறது.

புஜங்கராவைப் பொறுத்தமட்டில் என்றோ ஒரு நாள் அது கவர்ச்சியாயிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது அந்தக் கவர்ச்சியின் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. வார்த்தைகளின் அர்த்தத்துக்கும் மனிதனுடைய வயதுக்கும் ஏதாவதொரு நெருங்கிய சம்பந்தமிருக்கிறதோ என்னவோ? பதினைந்து வயது வரை அகராதியில் சொல்லியிருக்கிற அர்த்தந்தான் தெரிகிறது. நாற்பது வயது வரை அனுபவங்களின் அர்த்தந்தான் தெரிகிறது. அதற்கப்புறம் எதிலுமே அர்த்தமிருப்பதாகத் தெரிவதில்லை. பூக்களின் மணத்தைப்போல் மனத்தைச் சுமந்து கொண்டிருந்த பொருள் வாடிக் கசங்கிய பின் ஒன்றுமில்லாமற் போவதுதான் வார்த்தைகளின் அர்த்தமோ என்னவோ?

புஜங்கராவின் வாழ்க்கை எத்தனையோ காரணங்களால் அர்த்தமிழந்து அல்லது அர்த்தமழிந்து போயிருக்கிறது. கடைசியில் அது நிரந்தரமாகவே அர்த்தமற்றுப் போய்விட்டது. இனி அதிலிருந்து அர்த்தம் பிறவாது. லில்லி வோட்ஹவுஸின் சாவுக்குப் பிறகு அவருடைய வாழ்வில் அவள் எந்த இடத்தை நிரப்பி அர்த்தமளித்துக் கொண்டிருந்தாளோ, அந்த இடமே அர்த்தமற்றுப் போய்விட்டது. அவர் தாய்நாடு திரும்பியு நாலைந்து ஆண்டுகளில் தகப்பனார் மூப்பினால் மரணமடைந்துவிட்டார். தகப்பனாருடைய மரணத்துக்குப் பின்பு அவருடைய தாயும் அதிக நாட்கள் இருக்கவில்லை. புஜங்கராவின் சகோதரிகளில் மூத்தவள் தெற்குக் கனராப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் கணவனோடு இருந்தாள். அவள் கணவன் ஒரு தாசில்தார். இளைய சகோதரி மைசூரில் கணவனோடு இருந்தாள். அவளுடைய கணவனுக்கும் ஏதோ பெரிய உத்தியோக்ம்.

புஜங்கராவ் மட்டும் அப்படியே இருந்துவிட்டார். அவரிடமிருந்து தீபாவளி தவறாமல் இரண்டு சகோதரிகளுக்கும் முழுசாக ஆயிரம் ரூபாய்க்குச் ‘செக்’ போகும். அவர்களும் எப்போதாவது கோடைக்காலங்களில் ஊட்டிக்கு வருகிற சாக்கில் தமையனுடன் எமரால்ட் எஸ்டேட்டில் இரண்டு மூன்று வாரங்கள் தங்கள் தங்கள் கணவரோடு வந்து தங்கிவிட்டுப் போவார்கள். தமக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அவர்களுடைய தங்குதலைப் புஜங்கராவ் எண்ணிக் கொள்வார். அதற்குமேல் அதிகமான அர்த்தம்