பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ஒரு கிராமவாசி சுதந்தர தினத்தன்று சிறைப்படுகிறான்

831

சிலையின் பீடத்தினடியிலே மூங்கில் தட்டி ஒரமாக வைத்து விட்டுத் தீப்பெட்டியை எடுத்துப் பற்ற வைத்தான்.

வேல்சாமியின் பின்னால் பூட்ஸ் சத்தம் கேட்டது. அவன் தீக்குச்சியைக் கீழே போட்டு விட்டுத் திரும்பினான். இரண்டு போலீஸ்காரர்களும் பார்க் வாட்ச்மேனும் நின்றனர்.

“ஏண்டா காலிப்பயலே காந்தி சிலைக்கு நெருப்பு வைக்கவா பார்க்கிறே? அப்பவே ‘வாட்ச்மேன்’ வந்து சொன்னான். ‘ஒரு ஆளு அருவாளும் கையுமா காந்தி சிலையைச் சுத்திச் சுத்தி வரான், பயமாயிருக்குது’ன்னு. நடடா ஸ்டேஷனுக்கு”

“இல்லிங்க எசமான், நான்...” வேல்சாமியை அவர்கள் பேச விடவே இல்லை. பிடரியில் கையைக் கொடுத்து ஒரு தள்ளுத் தள்ளினான் கான்ஸ்டபிள். காந்தி சிலையின் கீழே கும்பிடுவது போல் தலை குப்புற விழுந்தான் வேல்சாமி.

அவனுடைய நெற்றியில் காந்தி சிலை அடித்தளத்தின் சிமிண்டு விளிம்பு மோதி இரத்தம் கசிந்தது. அவனுடைய விளக்கத்தைக் காதில் ஏற்றுக் கொள்ளாமலே போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு போய், ‘காந்தி சிலையருகே நள்ளிரவில் அரிவாளும் கையுமாக வந்து நெருப்பு வைக்க முயன்றதாக’ச் சார்ஜ் ஷீட் எழுதி விலங்கு மாட்டி அவனை உள்ளே தள்ளினார்கள் போலீஸ்காரர்கள்.

வேல்சாமி சிறைக்குள் மெளனமாக அமர்ந்து கண்ணிர் சிந்திக் கொண்டிருந்த போது முனிசிபல் கட்டிடத்தின் வாசலிலிருந்து,

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோமென்று ஆடுவோமே..."

என்று ஒலிபெருக்கியின் மூலம் பாட்டு எழுந்து ஒலிக்கத் தொடங்கியது. இருண்ட சிறையின் மூலையில் ஒர் இந்தியக் கிராமவாசி விலங்கு பூட்டிய தன் கைகளோடு குத்த வைத்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அந்தச் சுதந்திர வெள்ளி விழா நாளில் அவன் மட்டுந்தான் தனியாக அழுதானா? இல்லை! பூங்காவின் இருளில் ஒர் உத்தமனின் சிலையுங்கூட அழுதிருக்கக் கூடும், கற்களுக்கும் அழும் சக்தி இருக்குமானால்,

(கலைமகள், தீபாவளி மலர், 1972)