பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1172 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

 'சரி எப்படியும் தொலையட்டும். கொண்டு வந்த பட்சணங்களையாவது கொடுப்போம் என்று சம்புடத்தைத் திறந்து வெல்லச் சீடையையும், பொரிவிளங்காயையும் பேரனின் அருகே சென்று நீட்டினார் கிழவர்.

அந்தப் பையன் தயக்கத்தோடு அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "ஐ கான்ட் ஈட் ஸ்டோன்ஸ்” என்று கதறாத குறையாக அலறி மறுத்தான். - "சாப்பிட்டுப் பாருடா அப்புறம் விடமாட்டே. டேஸ்டா இருக்கும்” என்று கிழவர் கெஞ்சியபோது அந்தச்சொற்கள் புரியாமல் தந்தையின் பக்கம் திரும்பி,"டாட் வாட் த ஒல்ட்மேன் ஸேய்ஸ்” என்று வினவினான் பேரப்பிள்ளையாண்டான். வாய் தவறிக்கூட அவன் தன்னை கிராண்ட் ஃபாதர்' என்றோ தாத்தா என்றோ கூறத் தயாராயில்லை என்பதைக் கிழவர் கவனித்தார்.

சீடை முறுக்கு எதையும் பேரன் விரும்பவில்லை. கனகசபையே, "அவனுக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா! வற்புறுத்தாதீங்கோ' - என்று கிழவரைத் தடுத்தான். தாத்தாவாயிற்றே என்ற கனிவு, மரியாதை, பாசம், பயபக்தி எதையுமே அந்தச் சிறுவனிடம் அவர் எதிர்பார்க்க முடியவில்லை.

கனகசபையோ, அவன் மனைவியோ கண்டிப்பான குரலில், “டேய் அவர் தாண்டா உன் தாத்தா! அவரைக் கிழவர்னோ, ஒலட்மேன்'னோ கூப்பிடாதே. மரியாதையாத் தாத்தான்னோ, கிராண்ட் ஃபாதர்னோ, கிராண்ட்பான்னோ கூப்பிடனும்” என்று அவனை ஒருமுறை கூடக் கடிந்து கொள்ளாதது வேறு அவருக்கு எரிச்சலூட்டியது. பேரனைத் தோள் மேல் தூக்கி அமர்த்திக் கொண்டு திருவிழாக் கூட்டத்தில் நடக்கும் கிராமத்துத் தாத்தாவின் பற்றோடும் பாசத்தோடும் புறப்பட்டு வந்திருந்த அவருக்கு மனசு வெடித்துவிடும் போலிருந்தது. இப்போது.

மேலே அங்கிருக்கும் ஒவ்வொரு விநாடியும் முள்மேல் இருப்பது போல் உணர்ந்தார் வேதகிரி, கனகசபையை விட உயரமாயிருந்த அந்தச் சிறுவன் பிஞ்சிலே பழுத்த முரண்டுடையவனாகத் தோன்றினான். அவனுக்குத் தமிழ் தெரியாது. அப்பனை மிஞ்சிய வளர்த்தி உடலிலே தெரிந்தது. ஆனால் மனம் வளரவே இல்லை.

செடிகளை ஒரிடத்தில் இருந்து பெயர்த்து இன்னோர் இடத்தில் நடும்போது முந்திய இடத்து மண்ணைக் கொஞ்சம் கொண்டு போய்ப் புதிய இடத்தில் நிரப்பி நடுவார்கள். அதற்குத் தன்மண் போடுதல் என்று பெயர். அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் இந்தியக் குழந்தைகள் தன் மண் போடாமலேயே வளர்ந்த செடிகள். அவர்களிடம் இந்திய மண்ணின் குடும்பவுண்ர்வு, பற்று, பாசம், மரியாதை, உறவு எதுவும் இருக்கமுடியாதுதான் என்றெண்ணி மனத்தைத் தேற்றிக்கொள்ள முயன்றார் கிழவர். ஆனாலும் மனம் வேதனைச் சுமையால் கனத்தது.

மாலையில் அவர்கள் விமானத்துக்கும், கிழவர் இரயிலுக்கும் புறப்படுகிற நேரம் வரை இந்த இறுக்கம் அப்படியே நீடித்தது. சிறிதும் தளரவே இல்லை. அவர் கிராமத்திலிருந்து பிரியமாகச் செய்து வந்த பட்சணங்களைப் பேரன், மகன், மருமகள்