பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்;
       கணக்கு அழிவை ஒரு நாளும் பேசவேண்டாம்;
பொருவார்தம் போர்க்களத்தில் போகவேண்டாம்;
       பொது நிலத்தில் ஒருநாளும் இருக்கவேண்டாம்;
இரு தாரம் ஒரு நாளும் தேட வேண்டாம்;
       எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்;—
குருகு ஆரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
       குமரவேள் பாதத்தைக் கூறாய்,நெஞ்சே!7

சேராத இடம்தனிலே சேரவேண்டாம்;
      செய்த நனறி ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்;
      உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்;
பேரான காரியத்தைத் தவிர்க்கவேண்டாம்;
      பிணைபட்டுத் துணை போகித் திரியவேண்டாம்;
வார் ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!8

மண் நின்று மண் ஓரம் சொல்லவேண்டாம்;
     மனம் சலித்துச் சிலுக்கிட்டுத் திரியவேண்டாம்;
கண் அழிவு செய்து துயர் காட்டவேண்டாம்;
     காணாத வார்த்தையைக் கட்டுரைக்கவேண்டாம்:
புண்படவே வார்த்தைதனைச் சொல்லவேண்டாம்;
     புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்கவேண்டாம்;-
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன். எம் கோன்,
     மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!9

மறம் பேசித் திரிவாரோடு இணங்கவேண்டாம்;
     வாதாடி வழக்கு அழிவு சொல்லவேண்டாம்;
திறம் பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்;
     தெய்வத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்;
     ஏசலிட்ட உற்றாரை நத்தவேண்டாம்;—
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்.
     குமரவேள் நாமத்தைக்கூறாய், நெஞ்சே!10