பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

பழமை கடைப்பிடியார், கேண்மையும் பாரார்,
கிழமை பிறிதொன்றும் கொள்ளார், வெகுளின் மன்;
காதன்மை உண்டே, இறை மாண்டார்க்கு? ஏதிலரும்
ஆர்வளரும் இல்லை, அவர்க்கு.46

'மன்னர் புறங்கடை காத்து வறிதே, யாம்
எம் நலம் காண்டும்?' என்று எள்ளற்க! பல் நெடு நாள்
காத்தவை எல்லாம். கடை முறை போய்க் கைகொடுத்து,
வேத்தவையின் மிக்குச் செயும்.47

உறுதி பயப்ப கடைபோகாவேனும்,
இறுவரைகாறும் முயல்ப:—இறும் உயிர்க்கும்
ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால்; அல்வனபோல்
ஆவனவும் உண்டு, சில.48

'முயலாது வைத்து, முயற்று இன்மையாலே
உயல் ஆகா, ஊழ்த் திறந்த' என்னார்;—மயலாயும்,
ஊற்றம் இறு விளக்கம், 'ஊழ் உண்மை காண்டும்!' என்று.
ஏற்றார், ஏறி கால் முகத்து.49

உலையா முயற்சி களைகணா, ஊழின்
வலி சிந்தும் வன்மையும் உண்டே;—உலகு அறியப்
பால்முளை தின்று மறலி உயிர் குடித்த
கான்முனையே போலும், கரி.50

காலம் அறிந்து, ஆங்கு இடம் அறிந்து, செய் வினையின்
மூலம் அறிந்து, விளைவு அறிந்து, மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து, துணைமை வலி தெரிந்து,
ஆள்வினை ஆளப் படும்.51

மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;—
கருமமே கண்ணாயினார்.52

சிறிய பகை எனினும், ஓம்புதல் தேற்றார்,
பெரிதும் பிழைபாடு உடையர்;—நிறை கயத்
தாழ் நீர் மடுவில் தவளை குதிப்பினும்,
யானை நிழல் காண்பு அரிது.53