பக்கம்:நூறாசிரியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

நூறாசிரியம்


பெண்மைக்கு இழுக்கு என்பையினே - (அவ்வாறு செய்வது) பெண் தன்மைக்கே இழுக்காகும் என்று சொல்வாயானால்,

யாங்கு நிற்கு உணர்த்துவன் அம்மே! நீ கொண்ட தோற்றத்தால் பெற்ற இழிவை எவ்வாறு நினக்குப் புரியுமாறு உணர்த்துவது, அம்மே!

தூங்கெழில் - செறிந்த அழகு.

ஏதென...என்னின் - எதுவென்று அறநூல் எழுதிய சான்றோர் எடுத்துக் கூறுவர் என்று கேட்பாயானால்,

பூங்குழன் மாதர்க்கு - பூவை மிடைந்த கூந்தலையுடைய மாதர்க்கு

பொருந்து நல்நாணும் - பொருந்துகின்ற நல்ல நாணையும் அழகுவேண்டி எங்ஙன் கூந்தலுக்குப் பூவைச் சூட்டுகின்றனரோ அவ்வாறே பெண்மைக்கு அழகு வேண்டின் நாணத்தைச் சூட்டிக் கொள்ளுதல் வேண்டும் என்று குறிப்புணர்த்தியவாறு.

விரையொளி...நெஞ்சும் - மணமும் ஒளியும் பொருந்திய நெற்றியை உடைய பெண்டிர் தம் பெண்மைக்கு மணமும் ஒளியும் சேர்ப்பதாகிய குற்றமற்ற உள்ளத்தையும்.

துவர்வாய் ... நடையும் - சிவந்து கனிபோலும் விளங்குகின்ற வாயையுடைய பெண்டிர்களுக்குத் தவறு சேராத ஒழுகலாறும், வாய், செம்மையாய் இருத்தல் போலவே நடையும் செம்மையாய் இருத்தல் வேண்டும் என்பதாம் என்க.

அச்சக் கதவமும் -பூரியர்க்கு அச்சமூட்டுகின்ற அல்லது தான் அஞ்சியொடுங்குகின்ற தன்மையும். இது பெண்மைக்கு காப்பாக அமைதலின் கதவம் எனலாயிற்று.

எச்சமில் உரை - குறையற்ற உரை, குற்றமற்ற சொல், இது பிறர் தம்மேல் சொல்லுதலும், தாம் பிறர்பால் உரைத்தலும் என இருவகைப் பொருளையும் தரும்.

என்றிவைதாமே அன்றி - இங்குக் கூறப்பெற்ற பண்பியல்புகள் மட்டுமே அல்லாமல்.

பிறவே - நீ உடுத்துக் கொண்டிருக்கும் மெல்லிய உடைகளோ, உறுப்புகளைப் பிறர் பார்த்து மனமயக்க முறும்படி வெளியில் காட்டுவது போன்ற பிறவகையில் செய்யும் புனைவுகளோ,

வென்றி ஆடவர் - வெற்றி பொருந்திய ஆடவர், ஆண்மை மிகுந்து விளங்குந் தன்மையர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/154&oldid=1220834" இலிருந்து மீள்விக்கப்பட்டது