பக்கம்:நூறாசிரியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

நூறாசிரியம்


அருளும், மெய்யறிவும், அடக்கமும் குறைந்துவரும் தற்காலத்து இறைமை பொதுளிய இயற்கைத் தன்மையினை மறந்து வாழும் மாந்த உயிர்களுக்கு, உள்ளொளி கொளுத்தி உயிரியக்கம் சிறக்கக் கூறியதாகும் இப்பாட்டு.

இனி, 'செருக்கு' என்பது கருப்பையை படைத்த கொழுப்பு போலவும், வித்தை அளவு மீறி மூடிய வலிந்த தோல் போலவும் விளைவைக் கட்டுக் குலைக்கும் ஒருவகைத் திரிபுணர்ச்சியாகும். அகச்செருக்கு இயல்பான அகவளர்ச்சியையும், அறிவுச்செருக்கு உயிர்களின் மெய்யுணர்வையும், வினைச்செருக்கு வாழ்வடக்கத்தையும் கட்டுக்குலைத்துத் திரிபடையச் செய்யும் என்னை? நேராக வளரக்கூடிய ஒரு மூங்கில் அல்லது ஒர் உடல் திருகல் முறுகலாக வளர்வதைப் போன்றதே திரிபு என்க.

இனி, உலகின் அகப்புறச் சமயங்கள் அனைத்தும் இறைவனின் இருக்கை பற்றிப் பலப்பலவும் கூறும். அவ்வச் சமயமும் அவ்வக் காலத்தே வாழும் மாந்தர்க்காக, அவ்வவ் விடத்தே வாழும் முதிர்வுற்ற மெய்யுணர்வினார் ஒருவர் அல்லது சிலரால் தோற்றுவிக்கப் பெற்றுக் காலக்கழிவில் பலராலும் பயிலப்பெற்றும், பயிற்றுவிக்கப்பெற்றும், வித்துருவினின்றும் அதைச் சுற்றியுள்ள கொட்டையும் சதைப்பும், நாறும், தோலும் எனப்படும் பொருள் உருவாய் வளர்ந்தும் பரந்தும் வருவதே ஆகும். எனவே எல்லாச் சமயத்துள்ளும் அகக்காழாய் இறையுண்மை இருப்பது போலவே புறக்காழாய் காலவெச்சங்களும், இடக் குற்றங்களும் மாந்தப் பிழைகளும் அமைந்தே இருக்கும். எல்லாச் சமயத்துள்ளும் அவை ஒரே படித்தாயும் இரா. ஒரே வகைப் பழம் பலாமரத்தின்கண் பல வேறு சுவையாயும், இனி அதுவே பல்வேறு நாட்டின்கண் வெவ்வேறு வடிவாயும் இருப்பது போலவே, இறையுண்மையும் சமயத்திற்குச் சமயமும், காலத்திற்குக் காலமும், இடத்திற்கு இடமும் மாறுபட்டு விளங்கும், இன்னுஞ் சொல்வதானால் பருப்பொருளாகிய பழத்தினும் நுண்பொருளாகிய இறைமை கால இடம் நோக்கி மிகவும் மாறுபடும். மாந்த இனத்திலேயே கற்கால மாந்தத் தோற்றமும் தற்கால மாந்தத் தோற்றமும் மிகுதியும் வேறுபட்டு விளங்குவதை யாவரும் நன்கு அறியலாம். சுருக்கமாகக் சொன்னால் உலக அமைப்பை ஒரு சில மூலக்கூறுபாடுகளின் வேறுபாட்டுத் தோற்றமே என்பதை அறிவியல் மெய்ப்பிக்கும். இனி, மெய்யறிவியலோ அம்மூலக்கூறுபாடுகளும் ஒரே ஒன்றின் உள்ளீட்டுத் திரிபுகளே என்று வரை நிறுத்தும். அந்த ஒன்றாய் இருப்பதையே சமயம் இறைமை என்கிறது.

உலகியலில், ஒருவர்மேல் பிறிதொருவர் கொள்ளும் ஈடுபாடே பொதுமை என்றும், பற்றென்றும், நட்பென்றும், அன்பென்றும், அருளென்றும், காதலென்றும், பத்தி என்றும் வேறுபட்டு விளங்கி நிற்பது போல், அவ்விறைமைப் பொருளே இயற்கையென்றும், மூலப்பொருள்கள் என்றும், ஐம்பூதங்கள் என்றும், உலகென்றும், உயிர்கள் என்றும் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/173&oldid=1220648" இலிருந்து மீள்விக்கப்பட்டது