பக்கம்:நூறாசிரியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153 நூறாசிரியம்

விளையே நசையுள வயினே - (இனி, அவ்வியக்கத்துட்பட்டவனின்) வினையோ, அவன் உள்ளத்து எழுந்த நச்சுதல் தன்மை வயத்தது. நச்சுதல்-நசை-ஆசை-அவாவுதல். ஒன்றின் உள்ளுணர்வே அவாவுதலுக்கடிப்படையும், அவ் வவாவுதலே வினைக்கு அடிப்படையும் ஆம் என்க. உளவயின் நசையும், நசைவயின் வினையும் எனக் கொள்க. நவிதலும் மெலிதலும் அதனுட்பட்ட (இனி அவ்வினையின்) நலிவும் மெலிவும். (அவற்றின் அடியாய ஆசையின் நலிவையும் மெலிவையும் பொறுத்தன வென்க)

நலிதல் வளத்தில் குறைதல், மெலிதல் பருமையிற் குறைதல்.

நலிதலும் மெலிதலும் கூறியதால் ஆசைக்கும் அதையொட்டியெழுந்த வினைக்கும் வளமும் பருமமும் உண்டென்க. ஆசை நிறைவேறுதலும் வினை முற்ற முழுமையுறுதலும் அவ்வவற்றின் வளத்தையும் பருமத்தையும் பொறுத்தனவே.

ஆசை அறத்தைத் தழுவி நிற்கையில் வளமையையும், பொருளைத் தழுவி நிற்கையில் பருமையையும் எய்தும் அது, முன்னதைத் தழுவாமல் பின்னதை மட்டும் தழுவுகையில் தன்னளவுற்றுப் பேராசை என்றும், பின்னதைத் தழுவாமல் முன்னதை மட்டும் தழுவுகையில் தன்னளவுற்று வெற்றாசை என்றும். இரண்டையும் தழுவுகையில் பொதுவளவுற்று முற்றாசை என்றும் பெயர் பெறும்.இம்மூன்று நிலைகளும் முறையே கடையும் இடையும் முதலும் ஆகும் என்க.

இனி, பேராசை நின்றெழுந்த வினை, ஆரவாரமும் கொடுமையும் தன்னலமும் நிறைந்ததென்றும், வெற்றாசை நின்றெழுந்தவினை அமைவும் மிடிமையும் தன்னலமறுப்பும் நிறைந்ததென்றும், முற்றாசை நின்றெழுந்த வினை பண்பும் பயனும் பொது நலமும் நிறைந்ததென்றும் கண்டு கொள்க.

இனி, இவ்வாசையின் அடியிரு நிலைகளும் ஒன்றின் ஒன்று தாழ்ந்தும் உயர்ந்தும்.நிற்கும் நிலைகளும் உண்டு என்க. அவ்வந் நிலைகளில் அவ்வவ் வினைகளும் அங்ஙங்கனே பயன் கொளுவும் என்க. இனி, இவ்வினைகளே நல்வினையென்றும் தீவினை என்றும் புறப்பயன் நோக்கி வகுத்துக் கூறப் பெறும் எவ்வாறாயினும் வினைக்கு அடிநிலை மன அவாவுதலே என்க.

அவை பொறி வழிய அவ்வினைகளும் உடலின் ஐம்பொறிகளின் வழியே நடைபெறுவனவாகும்.

வினைகள் அவாவினின் றெழுந்து பொறிகளின் வழியாய் நிகழ்த்தப் பெறுகின்றன. வினை எழுச்சிக்கு அவாவுதலே கரணியமாய் அமைந்தாலும், அவ்வினைமலர்ச்சிக்கு ஐம்பொறிகளே கருவிகளாக அமைந்துள்ளன. அமையவே ஒரு வினை நிகழ்வு மன அவாவுதலையும் ஐம்பொறி நலத்தையும் பொறுத்த தென்க. எனவே அளவிடைப் பொழுதாயமைந்த சிறுகல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/179&oldid=1220662" இலிருந்து மீள்விக்கப்பட்டது