பக்கம்:நூறாசிரியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

நூறாசிரியம்


இனிதோட்குரியோயே என்று மூன்றாம் முறை அடுக்கியது. அவ்வாறு இளைத்துப் போகின்ற தன்மைக்கு நீ இரங்குதல் வேண்டும் என்று குறித்தது. முன் மழை - காயும் முன் யாமத்து மழை பொழிந்து பின் யாமத்து நிலவொளி காய்கின்ற இரவு.

முன் யாமத்துப் பெய்த மழையால் நிலமும் காற்றும் குளிர்ச்சி யடைந்திருப்பினும், பின் யாமத்தின் நிலவொளி அவளுக்கு வெப்பத்தைத் தருகின்றது. அந்த நிலைக்குப் பிரிவுத் துயரால் அவள் வாடுகின்றாள் என்றபடி,

மென்னடை இரவு - மெதுவாகக் கழிகின்ற இரவு. முன்யாமத்து மழை பெய்வதும், பின் யாமத்து நிலவு காய்வதும் போலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தலைவி தூங்காமலிருந்து காணுவதால் அவளுக்கு அவ்விரவு மெதுவாகக் கழிகின்றதுபோல் தோன்றகின்றது. விரைந்து போகாத தன்மையால் நடக்கின்ற இரவு என்றாள்.

எதிர்நாள் எண்ணி - இரவுக்குப் பின் வருகின்ற பகலுடன் தலைவன் தன்னைப் பிரிந்து சென்ற நாளைக் கணக்கிட்டு எண்ணிப் பார்த்தவளாய்.

நோன்றரு பிரிவு- தாங்குதற்குரிய பிரிவு. இல்லிருத்தல் முல்லை என்றதால் நோன்பு என்பதைக் கற்பு நோன்பாகக் கொண்டு, அந்நோன்புட்ன் கூடிய அரிய பிரிவு என்றும் பொருள் கொள்க.

தான்.தனிப் புலம்.நள் - தான் ஒருத்தியாகவே தனித்துப் புலம்புதல். புலம்புதல் தனியாகப் பேசிக்கொள்ளுதல், நாள் எண்ணுதல் வராமை குறித்து வருந்துதல் போலும் புலம்பல்.

ஆன்ற தெரு- அகன்ற தெரு அகன்றிருப்பதால் நீண்டும் இருத்தல் வேண்டும் என்க.

அதிர் சிலை மடுத்து - அதிர்ந்து வரும் எதிரொலியைக் கேட்டு. இரவில் எங்கோ தெருக்கோடியில் குரைக்கின்ற நாயின் ஒலி, நெடிதகன்ற தெருவாகலின், எதிரொலித்துக் கேட்கின்றது. இனி, மடுத்து என்றதால் தலைவியே அவ்வொலியைக் கூர்ந்து கேட்டு அறிந்தாள் என்க.

ஓய்வறக் - குக்கல்- ஓய்வில்லாமல் குரைக்கின்ற தனித்த ஒரு குள்ளநாய். ஒலி வேற்றுமையால் அதைக் குள்ள நாய் என்றும் தனித்த நாய் என்றும் உணர்ந்தாள் என்க.

இனி, தன்போலவே அந்த நாயும் இரவில் ஒய்ந்திராமல் தொடர்ந்து குரைத்துக் கொண்டே யிருப்பதால், அதுவும் துணையின்றித் தனியாகத்தான் இருத்தல் வேண்டும் என்றும் வரைந்தாள் என்க.

பாய்ந்து இன்வருகை தடுக்கும் என்று அஞ்சி-மேற் பாய்ந்து தலைவனின் இனிய வருகையைத் தடுத்துவிடுமோ என்று அஞ்சியவளாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/198&oldid=1221041" இலிருந்து மீள்விக்கப்பட்டது