பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

122

பதிற்றுப்பத்து தெளிவுரை

 கூறியது; இவ்வாறு அழித்தலைச் செய்வர் என்பதனைக் 'கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய் திறந்த பின்னும் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும். மூழ்த்தல் - மொய்த்தல். வகைவகை யூழூழ் கதழ்ம்பு மூழ்த்து ஏறி' என வரும் பரிபாடல் அடியும் நோக்குக. (பரி. 10 : 18). வியன் தானை - பரந்த தானை; இது பகைவர் நாட்டு எல்லையுள் முற்படச் சென்றுவிட்ட தூசிப் படையை. 'புலங் கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்' என்றது, தொடர்ந்து வரும் பெரும் படையினை. கரையினையுடைய கடலினும் பெரிதாகப் பரவிச்சென்ற பெரும் படை என்பவர், 'வரம்பில் வெள்ளம்' என்றனர். 'கால் வழங்கு ஆரெயில்' - கால்களால் திரிதரும் கடத்தற்கரிய அரண்: படை மறவரே அரணாகச் சூழ்ந்திருந்தனர் என்பதாம். போரினைச் செய்ய வேண்டாதே, படை சென்றதும் பகைவர் ஓடி மறைந்தது வியப்புத்தருவது என்றனர்.

34. நுண்பொறிக் கழற்கால் !

துறை : தும்பை யரவம். வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : ஒண்பொறிக் கழற்கால். இதனாற் சொல்லியது : நார்முடிச் சேரலின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம் : 'தும்பை' என்பது, மைந்து பொருளாக வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற்று. 'அரசுபடக் கடக்கும்' என, வென்றி கோடலே கூறினமை யான் 'தும்பைத் துறை' ஆயிற்று: 'ஒரூஉப' எனப் படை எழுச்சி மாத்திரமே கூறினமையின், அதனுள் "அரவம்" ஆயிற்று.

"செல்வுளைய" முதலாக வரும் அடிகள் இரண்டும் வஞ்சியடிகள்; ஆதலின் வஞ்சித்தூக்கும் ஆயிற்று. தாங்கள் ஆற்றிய சிறந்த போர்த்தொழிலைப் பொறித்தலையுடைய ஒள்ளிய வீரக்கழல் அணிந்த கால் என விசேடித்து உரைத்தலின், இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]

ஒரூஉப நின்னே ஒருபெரு வேந்தே! ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால் இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர்