பக்கம்:பழைய கணக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

வைக்க வேண்டுமே, அந்த அளவுக்குத் தகுதியும் அந்தஸ்தும் பெற்றவர் அங்கே யார் இருக்கிறார்கள்? சுற்று முற்றும் பார்த்தேன். திரு எஸ். எஸ். வாசன் அவர்களைத் தவிர அதற்குப் பொருத்தமானவர் வேறு யாரும் என் கண்ணில் படவில்லே. வாசன் அவர்களை அணுகி விவரத்தைச் சொன்னேன்.

“எனக்கு அவரிடம் பழக்கம் இல்லையே” என்று தயங்கினார் வாசன். “உங்களைப் பற்றி அவர் நிச்சயம் அறிந்திருப்பார். தயவு செய்து தாங்கள் தான் உதவிக்கு வரவேண்டும்” என்று விநயமாய் வாசன் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். என் சங்கடத்தைப் புரிந்து கொண்ட வாசன் எழுந்து வந்தார். மகாராஜா இதற்குள் அவர் யார் என்பதைப் புரிந்து கொண்டு முகமலர்ச்சியோடு அவரை பக்கத்தில் அமரச் சொன்னார். அன்று இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த காட்சி அந்த நிகழ்ச்சிக்கே சிகரம் வைத்தற்போல் இருந்தது.

அப்போது அவர்கள் இருவரையும் எடுத்த புகைப்படம் ஒன்று மிக அபூர்வக் காட்சியாக அமைந்து விட்டது. வாசனும் மைசூர் மகாராஜாவும் சிரித்துப் பேசும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை உதித்தது. இந்தப் படத்தைப் பெரிதாக என்லார்ஜ் செய்து சட்டம் போட்டுக் கொண்டு போய் வாசன் அவர்களிடம் கொடுத்தால் சந்தோஷப் படுவார் என்று எண்ணினேன்.

மறுநாளே அந்தப் படத்தை அழகாக ஃப்ரேம் செய்து கொண்டு வாசன் அவர்களைப் பார்க்கச் சென்றேன்.

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வாசன் அவர்கள், “இது எதற்கு?” என்று கேட்டார். “மிக நன்றாக வந்திருக்கிறது. வீட்டில் மாட்டி வைக்கலாம்” என்றேன்.

“நோ நோ! அதெல்லாம் கூடாது. நீ அழைத்தாய் என்பதற்காக நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். இதை என் வீட்டில் மாட்டி வைத்து, நானும் மகாராஜாவும் ரொம்ப நாள் சிநேகிதர்கள்” என்பது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? அது போலித்தனம் ஆகாதா? ஸாரி, அதை நான் விரும்பவில்லை. முதலில் இதை எடுத்துக் கொண்டு போய் விடு” என்று கண்டிப்பாகக் கூறித் திருப்பி அனுப்பி விட்டார். வாசனின் இந்தப் பண்பாடு பற்றியும் டயரியில் குறித்துக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/10&oldid=1145654" இலிருந்து மீள்விக்கப்பட்டது