உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

திரு வெங்கட்ராமனைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் நிகழ்ச்சிகள் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற வேண்டியிருந்ததால் அந்த இடத்தை டிராக்டர்கள் கொண்டு மேடு பள்ளம் நிரவி சுத்தப்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக அவரிடம் போயிருந்தேன்.

இந்த விஷயத்தை நான் அவரிடம் சொல்லப் போயிருந்த போது அவர் “வாங்க, இந்த ஃபாரத்தைப் பூர்த்தி செய்து கொடுங்க” என்று ஒரு விண்ணப்பத்தாளைத் தம் மேஜை டிராயரிலிருந்து எடுத்து என்னிடம் தந்தார். பார்த்தால் ஹவுஸிங் போர்டு அப்ளிகேஷன்.

காமராஜர், ஏதோ என்னிடம் ஒப்புக்காகச் சொல்லாமல் உடனடியாக திரு வெங்கட்ராமனையும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். ஃபாரத்தை நிரப்பிக் கொடுத்தேன். சில நாட்களில் எனக்கு அண்ணா நகரில் ஒரு வீட்டு மனை ஒதுக்கப்பட்டது.

சரி, மனை கிடைத்தாயிற்று. வீடு கட்டுவது எப்படி? என்னால் அது முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. காலி மனையை அப்படியே விட்டு வைத்திருந்தேன். பணம் சேர்த்து வீடு கட்டி முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படாததால் நான் அந்தப் பணக்காரக் கனவைக் காண்பதே இல்லை.

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மாறி தி. மு. க. பதவிக்கு வந்தது. வீட்டு வசதி அமைச்சராக திரு க. ராசாராம் பதவி ஏற்றார். அண்ணா நகரிலுள்ள தமிழ்வாணன் வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு வத்திருந்த திரு ராசாராம் அங்கே என்னைக் கண்டு விட்டு, “நீர் எப்போது வீடு கட்டப் போகிறீர்?” என்று கேட்டார். என் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர்களில் அவரும் ஒருவர் என்பதை இந்த நேரத்தில் நன்றியோடு கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ஏற்கனவே எனக்கு மனை ஒதுக்கப்பட்டாயிற்று. ஆனாலும் என்னால் வீடு கட்ட முடியாத நிலையில் இருக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். “அப்படியா?” என்று கேட்டவர் தாமாகவே முன் வந்து ஹவுஸிங் போர்டு மூலம் வீட்டைக் கட்டி முடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

“முதலில் எவ்வளவு பணம் கட்ட முடியும்?” என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/103&oldid=1146090" இலிருந்து மீள்விக்கப்பட்டது