உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

நடைபெறும். என் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். குறிப்பிட்ட நேரம்தான் வேலை என்பது கிடையாது. சில நாட்களில் இரவு முழுதும் கூட ஆபீஸிலேயே தங்கி வேலை செய்வோம்.

எடிடோரியல் டிஸ்கஷனுக்கென்று தனியாகப் பெரிய அறை ஒன்றை ஒதுக்கி, அதில் மேஜை நாற்காலிகள் போடாமல், மார்வாரி திண்டுகள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஒருநாள் பாலுவிடம் சொன்னேன். மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு வேலை செய்வது எனக்குப் பிடிக்காத ஒன்று. சுதந்திரமாக இயங்குவதற்கு ஏற்றபடி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது என் கருத்து பாலு அதை அங்கீகரித்தார்.

சிந்திப்பது, எழுதுவது, ப்ரூஃப் திருத்துவது ஆலோசிப்பது என்று இப்படி மாறி மாறி ஓயாது வேலை செய்தபோது ஒருநாள் நான் பாலசுப்ரமணியன் அவர்களிடம், “உதவி ஆசிரியர்கள் களைப்படையும் போது சற்று நேரம் படுத்துத்தூங்க ஒரு சின்ன மெத்தையும் தலையணையும் இருந்தால் வசதியாக இருக்கும். அவரவர்கள் அறையிலேயே படுத்துத் தூங்கிவிட்டுப் பிறகு மெத்தையைச் சுருட்டி பீரோவுக்குள் வைத்து விடலாம்” என்றேன். அவர் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆனால் மறுநாளே எல்லாருடைய அறைக்கும் மெத்தையும் தலையணயும் வந்து சேர்ந்து விட்டன!

ஒருநாள் நான் என் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது பாலசுப்ரமணியன் என் அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். “என்ன ஸார், தூக்கமா?” என்று கேட்டார்.

ஆமாம் நாற்பது வருஷங்களுக்கு முன் நான் இந்த, ஆபீஸில் தூங்கியதற்காகத் தங்கள் தந்தையார் என்னை வேலையை விட்டு அனுப்பிவிட்டார். தாங்களோ இப்போது மெத்தை தைத்துப் போட்டு என்னைத் தூங்கச் சொல்கிறீர்கள். இதை நான் என்னுடைய வெற்றியாகக் கருதுகிறேன்” என்றேன். சிரித்தார்!

இந்த சமாசாரத்தை நான் டி. வி. பேட்டியின் போதும் சொன்னேன். அதைக் கேட்டு விட்டு பாலு என்னை டெலிபோனில் அழைத்து, “உங்கள் நகைச்சுவை உணர்வு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நான் உங்கள். டி. வி. பேச்சை ரொம்ப ரசித்தேன். ஆபீஸில் தூங்கிய விஷயத்தை இவ்வளவு நகைச்சுவையோடு அழகாகச் சொல்லி விட்டீர்களே!” என்று பாராட்டினாா்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/106&oldid=1146093" இலிருந்து மீள்விக்கப்பட்டது