பக்கம்:பழைய கணக்கு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சாப்பிடுகிறர்கள்’ என்ற அனுதாபத்துக்கும் கேலிக்கும் இலக்காவார்கள். எனக்குக் கூழ் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். என் குடும்பம் அப்போது வசதியான நிலையில் இருந்தாலும் எனக்குப் பிடிக்கும் என்பதற்காக விழாக் காலங்களில் சாலில் கூழ் நிரப்பும் போதே என் தாய் தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்து எனக்கும் என் போன்ற சிறுவர்களுக்கும் கொடுப்பார்கள். அதில் கெட்டித் தயிரை விட்டுப் பிசைந்து சாப்பிடும்போது கிடைக்கும் ஆனந்தத்துக்காகவே ஆயிரம் முறை பிறப்பெடுக்கலாம். கூழ் சாப்பிட்டால் வயிறு ‘பம்’மென்று நிரம்புவதுடன் உள்ளமும் உடலும் குளிர்ந்து போகும். மாரியம்மன் மனம் குளிர்ந்து ஊருக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் கூழ் படைப்பதாய்ச் சொல்வார்கள். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள கடுகனூரில் என் மாமா வசித்து வந்தார். அவர் ஊரில் விழா என்றாலும் நான் நடந்து போய் கூழ் சாப்பிட்டு விட்டு, தெருக்கூத்தும் பார்த்து விட்டுத்தான் ஊர் திரும்பி வருவேன். நானாகவே விரும்பிக் கூழ் சாப்பிட்ட முதல் கால கட்டம் இது.

பின்னர் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரம் குன்றி, மிஞ்சி இருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்து சுகங்களும் போய் குசேலர் நிலைக்கு வந்து விட்டோம். அந்த வறுமையை விவரித்துச் சாத்தியமில்லே. என் அம்மாவுக்குக் கட்டிக் கொள்ள மாற்றுப் புடவையில்லாத காரணத்தால், இருந்த ஒரே புடவையை இரண்டாகக் கிழித்து, ஒன்று கட்டியிருக்கையில் இன்னென்றைத் துவைத்துப் போட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். இது என் குடும்பத்தின் அன்றைய வறுமை நிலைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அரிசி அப்போது எங்களுக்குக் கனவுச் சோறாக இருந்தது. கேழ்வரகு ரொம்ப மலிவு விலை என்ற போதிலும் அதை வாங்கும் சக்தி கூட இல்லாமல் கால்படி, அரைப்படி என்று குடியானத் தெருவிலிருந்து ரகசியமாகக் கடனாக வாங்கி வந்து காய்ச்சிக் குடிப்போம். வறுமையின் கட்டாயத்தால் நான் கூழ் குடிக்க நேர்ந்த இரண்டாவது கால கட்டம் அது.

முப்பது வருடத்துக்குப் பின்னர் இப்போது எனக்கு வாழ்க்கையில் போதிய வசதிகள் கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலும் நான் தினமும் சாப்பிடுவது கூழ் தான். இதற்குக் காரணம் என் விருப்பமுமில்லை, வறுமையுமில்லை. எனக்கு டயபடீஸ் இருப்பதால் அடிக்கடி எடுக்கும் பசியைத் தணிக்க அரிசிச் சோற்றைக் காட்டிலும் கூழ் கன ஆகாரமாயிருப்பதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/145&oldid=1146136" இலிருந்து மீள்விக்கப்பட்டது