உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

அவளைப் பார்ப்பதற்காகவே காலையிலும் மாலையிலும் அந்தத் தோப்புக்குப் போய் விட்டு வருவேன். அவளிடம் ஏதாவது வலியப் பேசி விட்டு வருவேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் மரத்தடியில் உட்கார்ந்து யாருக்கோ பச்சை குத்திக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட போது அவள் என்னைத் தொட்டுப் பச்சை குத்த வேண்டும் என்று அந்தரங்கமாய் ஓர் ஆசை என்னுள் எழுந்தது.

“பச்சை குத்த எவ்வளவு தர வேண்டும்?”

“ஒர்ணா குடு” என்றாள். வீட்டில் காசைத் திருடி எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடுத்தேன். என் இடது கையில் நானே பேணாவினால் M.S.V. என்று மூன்று எழுத்துக்களை எழுதி அவற்றின் மீது அப்படியே பச்சை குத்தச் சொன்னேன். அவள் என் இடது கையை இழுத்துத் தன் மடி மீது வைத்துக் கொண்டு (ஒரு கிளுகிளுப்பு) ஊசியால் சுருக் சுருக்கென்று குத்தியபோது எனக்கு அந்த வலி தெரியவில்லை. அந்தக் குத்தலில் ஓர் இன்பம் இருந்தது. இந்த உணர்வு எனக்குப் புதிய அனுபவம். இதன் பின்னணி ஸெக்ஸ்தான் என்பது எனக்கு அப்போது விளங்கவில்லை. பிற்காலத்தில் வயது முதிர்ந்து பக்குவம் பெற்ற பிறகே புரிந்து கொண்டேன். அந்தக் குறத்தியின் பல்வரிசை, ‘கொல்’ சிரிப்பு, தொப்புள் தெரியும் இளம் தொந்தி, டப்பா தட்டிக் கொண்டு ‘லல்லல்லல்லா’ பாடி டான்ஸ் ஆடியது எல்லாமே என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தின. அப்புறம் அவள் வேறு ஊருக்குப் போய் விட்டாள்.

அவள் போனபின் மாம்பாக்கமே ஒளி இழந்த மாதிரி எனக்குப் பட்டது. பச்சை குத்திக் கொண்டதற்குக் குறத்தியிடம் எனக்கிருந்த கிறக்கம் மட்டும் காரணமல்ல. என் இங்கிலீஷ் அறிவை அதாவது எம். எஸ். வி. என்று எழுதத் தெரிந்துவிட்ட புலமையைக் காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பமாக அது அமைந்து விட்டதும் ஒரு காரணமாகும்.

என் உடல் வளர்ச்சிக்கு ஏற்றாற் போல அந்த எழுத்துக்களும் என்னோடு சேர்ந்து பெரிதாக வளர்ந்து கொண்டேயிருந்தன. அப்புறம் அந்த எழுத்துக்களை நான் பார்க்கும் போதெல்லாம் அவை என்னைப் பார்த்து ‘அசடே!’ என்று அழைப்பது போலத் தோன்றுகிறது. இப்போது கூடச் சில நண்பர்கள் என் கையிலுள்ள அந்த எழுத்துக்களைப் பார்த்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/152&oldid=1146146" இலிருந்து மீள்விக்கப்பட்டது