உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163

“நீ நல்லபடி வந்து சேர்ந்தாயே, அதுவே போதும். உன்னை உயிரோடு பார்ப்போமா என்றாகி விட்டது. நீ கிடைத்து விட்டால் தெய்வத்துக்கு சமாராதனை செய்து பிராமணர்களுக்குச் சாப்பாடு போடுவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளோம். எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை. அந்த தெய்வம் உன்னை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டது. அதனால் பிரார்த்தனையை இன்றே நிறைவேற்றி விட முடிவு செய்து அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது” என்றனர் என் தாய் தந்தையர்.

வீட்டில் வாழை இலைக் கட்டும், கறிகாய்களும் வந்து குவிந்திருந்தன. பின் கட்டில் சமையல் நடந்து கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து பாயச வாசனையும், முந்திரிப் பருப்பு வறுபடும் வாசனையும் சேர்ந்து மூக்கைத் துளைத்தது. முன் கட்டில் ஊதுவத்தி மணத்துடன் பூஜை நடந்து கொண்டிருந்தது.

பதினோரு மணிக்கு எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் பிராமணர்களுக்குத் தாம்பூலம் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவரான கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் ஏப்பம் விட்டபடி என்னிடம் வந்து, “சாப்பாடு பிரமாதம்டா! நீ அடிக்கடி இந்த மாதிரி காணாமல் போய்க் கொண்டிரு. அப்போதுதான் எங்களுக்கு இந்த மாதிரி சாப்பாடு கிடைத்துக் கொண்டிருக்கும்” என்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/164&oldid=1146160" இலிருந்து மீள்விக்கப்பட்டது