உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கலைமகளுக்குத் தமிழும் புரியுமே !

உபயகுசலோபரி, சாங்கோபாங்கம், கரதலாமலகம், சிரக்கம்பம், நிர்மானுஷ்யம் போன்ற வடமொழிச் சொற்களை ஏராளமாகப் பயன்படுத்தி ஆனந்தவிகடனில் கதை கட்டுரைகள் வெளியிட்ட காலம் ஒன்று உண்டு.

பெரும்பாலும் பிராம்மண பாஷையில் பிராம்மண குடும்பங்களை வைத்து எழுதப்பட்ட கதைகளே அதிகம் வெளியாகும். கல்கி எழுதிய தியாக பூமி கதை கூட அப்படித்தான்.

கல்கி 1940-ல் விகடனை விட்டு விலகி, சொந்தப் பத்திரிகை தொடங்கியதும், இந்தக் கொள்கையை அடியோடு மாற்றிக் கொண்டார். கதை கட்டுரைகளில் பிராம்மணக் கொச்சையைத் தவிர்த்தார். தமிழ், தமிழர் என்ற உணர்வுக்கு ஊக்கம் தந்து கதை கட்டுரைகள் எழுதினார். ‘தமிழில் பாட வேண்டும்’ என்ற ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களுடைய தமிழிசை இயக்கத்துக்கு உறுதுணையாக நின்று கட்டுரைகள் எழுதி பலம் தேடித் தந்தார்.

இதனாலெல்லாம் கல்கி பத்திரிகையைத் தமிழர்கள் பத்திரிகை என்றும் விகடனை பிராம்மண சார்புள்ள பத்திரிகை என்றும் சொன்னார்கள்.

ஆனந்த விகடனுக்குப் பிறகு தொடங்கப் பெற்ற கல்கி பத்திரிகையின் ஸர்க்குலேஷன் ஒரு லட்சத்தைத் தாண்டி விட்ட போது விகடன் ஸர்க்குலேஷன் அறுபதாயிரம் எழுபதாயிரத்தைத் தாண்டிப் போக முடியாமல் ஒரு தேக்க நிலை இருந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/74&oldid=1146017" இலிருந்து மீள்விக்கப்பட்டது