உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

‘ஓவர்டைம்’ விகடனில் பிரசுரமாகி வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுப்பது என்று முடிவானபோது நானும் மணியனும் பாலுவிடம் நீண்ட நேரம் பேசி எழுபத்தைந்து ரூபாயாக உயர்த்தினோம். பிறகு ஜெயகாந்தன் தம் கதைகள் ஒவ்வொன்றும் ‘முத்திரைக் கதை’யாகத்தான் வரவேண்டும் என்று விரும்பினார். விகடனுக்கு வரும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து விகடன் ஆசிரியர் குழுவினர் முத்திரைக்குச் சிபாரிசு செய்வார்கள். ஆனால் ஜெயகாந்தன் தம் கதைகள் எல்லாமே முத்திரைக் கதைகளாக வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவே அவர் கதைகள் எல்லாவற்றுக்குமே முத்திரை கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

“முத்திரையைக் குத்த வேண்டியவர்கள் ஆசிரியர் குழாம். ஜெயகாந்தன் தன் கதைகளுக்குத் தானே முத்திரை குத்திக் கொள்வது எப்படி சரியாகும்?” என்பது என் வாதம்.

ஆனால், இதற்குப் பின்னரும் அவர் கதைகள் ‘முத்திரைக் கதை’களாகவே வெளியாகிக் கொண்டிருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாருக்காகவும் ஒரு பத்திரிகை தனது கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது என் கருத்து. ஆனால் நான் இதையெல்லாம் சொல்லத்தான் முடியுமே தவிர செயல்படுத்தும் அதிகாரம் என்னிடம் இருக்கவில்லை. எனவே ஜெயகாந்தன் விவகாரத்தில் தலையிடுவதை நான் அத்துடன் நிறுத்திக் கொண்டு விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/78&oldid=1146021" இலிருந்து மீள்விக்கப்பட்டது