பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“எங்கே அடைந்துகிடந்தால் என்ன அம்மா? இது சிறிய நந்தவனம், உலகம் பெரிய நந்தவனம். இங்கே செடிகளின் கிளைகளில் நாட்களை எல்லையாகக் கொண்டு பூக்கள் பூத்து உதிர்கின்றன. அங்கேயோ காலத்தின் கிளைகளில் விதியை எல்லையாகக் கொண்டு உயிர்ப் பூக்கள் பூத்து உதிர்கின்றன. இன்று உதிர்ந்துள்ள பூக்களே நாளை உதிரப்போகும் பூக்களுக்கு உரமாகும். இந்த உயிர்ப் பூக்களின் நந்தவனத்தில் எதையும் நடுவராக நின்று பார்த்துக் கொண்டே நடந்து போய்விடவேண்டும். இல்லாவிட்டால் துன்பம்தான்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கோட்டாற்றுப் பண்டிதர்.

“என்னைப் போன்றவர்களால் ஆசைகளையும் பாசங்களையும் சுமந்து கொண்டு அப்படி நடுவாக நடந்து போய்விட முடிவதில்லையே அடிகளே!”

“முடிகிற காலம் ஒன்றுவரும், தாயே! அப்போது நானே உங்களைச் சந்தித்து நினைவூட்டுவேன். இன்று நான் இங்கே வந்தது உங்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருப் பதற்காக அல்ல. நானும் இதோ உடன் வந்திருக்கும் இந்தத் துறவியும் மறுபடியும் வடதிசையில் யாத்திரை போகிறோம். அதற்கு முன் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகலாமென்று வந்தேன்.”

“அடிகள் திரும்ப எவ்வளவு காலமாகுமோ?” “யார் கண்டார்கள்? நான் திரும்புவதற்குள் எங்கெங்கே எத்தனை மாறுதல்களோ? தாயே! எப்போதும் நாளைக்கு நடப்பதை எண்ணித் திட்டமிடுகிற வழக்கமே எனக்கு இல்லை. நீரின் வேகத்தில் விழுந்த துரும்புபோல் கால ஒட்டத்தில் என்னைத் தள்ளிக்கொண்டபின் என்னை இழுத்துச் செல்ல வேண்டியது அதன் பொறுப்பு. நாளைய தினத்தைப் பற்றிப் பெரிதாக எண்ணாதீர்கள். அது உங்கள் நினைப்பைப் போல் இல்லாமலும் போகலாம்!” எதையோ சுருக்கமாக மறைத்துச் சொல்லிச் சிரிப்பவர்போல் சிரித்தார் அவர். “அடிகளே! இன்றைய தினத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால் அதைப் பற்றி