உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பிரதாப முதலியார் சரித்திரம்

நாங்களும் பல்லக்கின் மூலை முடுக்களெல்லாம் தேடிப் பார்த்தோம். இந்த அம்மணியை எங்கும் காணோம். பஞ்சரத்தில் இருந்த கிளி பறந்துபோன பிற்பாடு, பஞ்சரம் வெறுமையாயிருப்பதுபோல் பல்லக்கும் வெறுமையாயிருந்தது. தாசில்தாருடைய அப்பனும் பாட்டனும் தேடி வைத்த பொக்கிஷத்தை நாங்கள் அபகரித்துக் கொண்டது போல, எங்கள் மேலே ரௌத்ராகாரமாய்க் கோபிக்க ஆரம்பித்தார். அடிப்பார் என்று பயந்துகொண்டு, நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தூரவிலகினோம். எங்களை அடிக்க அவர் கையில் ஒரு ஆயுதமும் இல்லாமல் இருந்ததால் நாங்கள் தெருவிலே கழற்றி வைத்திருந்த எங்களுடைய செருப்பை அவர் கையிலே தூக்கிக்கொண்டு துரத்தினார். நாங்கள் அகப்படாமல் சிட்டாய்ப் பறந்தோம்; நாங்கள் ஓட, அவர் ஓட இவ்வகையாக வெகு தூரம் துரத்திவந்த பிற்பாடு அவர் கையிலிருந்த செருப்பை எங்கள் மேலே எறிந்தார். திரும்பித் தாசில்தாருடைய முகத்திலே மோதிற்று. ஔஷதப் பிரயோகத்தினால் விஷம் இறங்குவதுபோல் செருப்படி பட்ட பிற்பாடு, தாசில்தாருக்குக் கோபம் தணிந்து, எங்களை நயமாய்க் கூப்பிட்டுக் காரியங்களை விசாரிக்க ஆரம்பித்தார். போகிகள் “நடு வழியில் ஒரு இடத்தில் கள்ளுக் குடிக்கிறதற்காகப் பல்லக்கை நிறுத்தினோம்” என்று ஒப்புக் கொண்டபடியால், அந்த இடத்தில் இந்த அம்மணி தப்பிப் போயிருக்கலாமென்று உத்தேசித்து உடனே தாசில்தாரும் அவருடைய நேசனும் இரண்டு குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு எங்கள் இருவரையும் கூட அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

நாங்கள் காடு மேடுகளெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு சூரியாஸ்தான சமயத்தில் இந்த அம்மணி ஏறிக்கொண்டு வந்த வண்டியைக் கண்டு மறித்தோம். அப்போது நடந்த யுத்தத்தில் தாசில்தாரும் அவருடைய நேசனும், குண்டுகள் பட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள்.