பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

பிரதாப முதலியார் சரித்திரம்

னத்தை மாற்றிப் பாளையதார் கக்ஷியை ஸ்தாபித்து அவரும் நான் முதலான சாக்ஷிகளும் நிரபராதிகளென்று சித்தாந்தஞ் செய்தார். அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களையும் கலெக்டரையும் உத்தியோகத்தை விட்டு நீக்கி அவர்கள் எங்களைத் தீவாந்தரம் அனுப்ப வைத்திருந்த கப்பலில் அவர்களையேற்றிச் சீமைக்கு அனுப்பிவிட்டார். அந்த சிரெஸ்ததார் பொய்க் கடிதத்தை உண்டுபண்ணி பாளையதார் முதலானவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்தபடியால் அவனை உத்தியோகத்திலிருந்து விலக்கி, அவன் எங்களுக்கு நியமித்திருந்த தீவாந்தரத்துக்கு அவனையே அனுப்பி அவனை தேசப்பிரஷ்டம் ஆக்கினார்.




31-ஆம் அதிகாரம்
கனகசபையின் கலியாணம்—கலியாணச்
சந்தடியில் தாலி கட்ட மறந்து விட்டது

முந்தின அதிகாரத்தில் சொல்லிய படி தீர்மானஞ் செய்த பிறகு, கவர்னர் எங்களை நோக்கிச் சொல்லுகிறார்:— “இப்போது விசாரணை யான சங்கதியில் அசம்பாவிதமென்று நினைக்கும் படி யான சில விஷயங்கள் கலந்திருந்தாலும், அந்த விஷயங்க ளெல்லாம் வாஸ்தவமென்றும் பாளையதார் கக்ஷி உண்மையான தென்றூம் நிர்த்தாரணம் செய்திருக்கிறோம். பாளையதார் பிள்ளை இறவாம லிருக்க, அந்தப் பிள்ளை இறந்தது போல அவருடைய சகோதரன் மாய்மாலம் பண்ணி, அந்தப் பிள்ளைக்குப் பதிலாகப் பால்காரிப் பிள்ளையை அடக்கம் செய்ததும்,