பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239


34-ஆம் அதிகாரம்
வேட்டை பார்க்கப்‌ போய்‌ வில்லங்கத்தில்‌
மாட்டிக்‌ கொண்டது—அநீத வழக்குகள்‌

ஆதியூருக்கு வடக்கே இரு காத வழி தூரத்துக்கு அப்பால் எல்லை காணக்கூடாத விஸ்தீரணமான காடுகளும் மலைகளும் இருந்தன. அவைகளில் யானை, புலி, கரடி, முதலிய துஷ்ட மிருகங்கள் பெருகி அடுத்த கிராமங்களிலிருக்கிற ஜனங்களுக்கும் ஆடு, மாடு முதலியவைகளுக்கும் சேதத்தை உண்டுபண்ணினபடியால், அந்த மிருகங்களை நாசஞ் செய்யும்படி வேட்டைக்காரர்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டுமென்று, பல கிராமத்தார் வந்து தேவராஜப் பிள்ளையிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். உடனே அவர் வேட்டைக்காரர்களை அழைப்பித்து மிருக வேட்டையாடும்படி உத்தரவு கொடுத்தார். நானும் கனகசபையும் வேட்டை பார்க்க விரும்பினமையால் தேவராஜப் பிள்ளை அவருடைய பெரிய பட்டத்து யானையைச் சிங்காரித்து வேட்டையாடுகிற கானகத்திலே கொண்டு போய்ச் சித்தமாய் வைத்திருக்கும்படி உத்தரவு செய்தார். நானும் கனகசபையும் குதிரைகளின் மேலேறிக்கொண்டு கானகத்துக்குப் போனோம். என்னுடைய குதிரை யானை நின்ற இடத்துக்கு முந்திப் போய்விட்டதால் நான் குதிரையினின்று யானைமேல் ஏறி, அம்பாரியில் உட்கார்ந்துகொண்டேன். யானைப்பாகன் கனகசபையைக் காணாமையினால் வழியைப் பார்த்துக்கொண்டு யானைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். வேடர்களால் கலைக்கப்பட்டு ஒரு பெரும்புதரில் பதுங்கிக் கொண்டிருந்த ஒரு புலியானது அந்தப் பாகன் மேலே பாய்ந்து அவனைத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. உடனே நான் என் கையிலிருந்த துப்பாக்கியிற் குண்டு போட்டுக் கெட்டித்துப் புலியின் மேலே