பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ அரச பதவி பெற்றது

269

என்று கேட்டேன். “மகாராஜாவுக்குக் கொல்லையிலே பங்காப் போடவும், கால் கழுவிவிடவும், பல் விளக்கி விடவும், முகங்கழுவித் துடைக்கவும், வேஷ்டி கட்டிவிடவும் இன்னும் பல பல வேலைகள் செய்யவும் கொல்லையில் நூறு பேர் காத்திருப்பது வழக்கம்” என்றார்கள். நான் உடனே கொல்லைக்குப் போகாமல் திரும்பி வந்துவிட்டேன். உங்களைத் தவிர வேறு புருஷர்களை நான் முகாலோபனஞ் செய்ததேயில்லை. நம்முடைய வீட்டில் வேலைக்காரர்களிடத்தில் பேசும்போது கூட எனக்கு நாணமுஞ் சங்கோசமுமா யிருக்கும். இப்படிப்பட்ட எனக்கு இத்தனை புருஷர்களுடைய மத்தியிலிருப்பது எவ்வளவு மனவருத்தமாயிருக்கு மென்பதை நீங்களே ஊஹித்துக்கொள்ள வேண்டும். நான் உடனே இதற்குப் பரிகாரந் தேடவேண்டுமென்று நினைத்து, அந்தப் புருஷர்களை நோக்கி “எந்தத் தேசத்திலும் ராஜாக்களுக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது வழக்கமா யிருக்கின்றது. இந்த ஊரில் ஏன் அந்த வழக்கம் அநுஷ்டிக்கப்படவில்லை? இது ஸ்திரீகள் இல்லாத நகரமா? அல்லது ராஜாவுக்கு ஊழியஞ் செய்வதை ஸ்திரீகள் தங்களுக்குக் கௌரவக் குறைவாக எண்ணுகிறார்களா? அதன் வயணந் தெரியவேண்டும்” என்றேன். உடனே அவர்கள் “மகாராஜாவே! உங்களுடைய அபிப்பிராயந் தெரியாமையினால் நாங்கள் உங்கள் பணிவிடைகளைச் செய்ய ஆரம்பித்தோம். கணக்கில்லாத ஸ்திரீகள் உங்களுடைய ஊழியங்களைச் செய்யச் சித்தமாய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைப்பிக்கும்படி உத்தரவானால் இந்த நிமிஷத்தில் வரவழைக்கிறோம்” என்றார்கள். நான் அவர்களை நோக்கி “எனக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது திருப்தியே யல்லாது புருஷர்கள் பணிவிடை செய்வது திருப்தி அல்ல; ஆகையால் நீங்கள் போய் ஸ்திரீகளை வரச் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் நான் ஸ்திரீ லோலனென்றும், கோலாகல புருஷ னென்றும் எண்ணிக்