பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசருக்கு மணம்‌ செய்விக்க முயலுதல்‌

343

தங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் இந்தச் சமயத்தில் உண்மையைச் சொல்வது சரியல்லவென்று நினைக்கிறேன்” என்றேன். உடனே அவள் “நான் உண்மைக்காகத் தலை கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் ஒரு காரியத்தைப் பற்றி மட்டும் யோசிக்கிறேன்” என்று சொல்லி அந்தக் காரியம் இன்னதென்று தெரிவிக்காமல் மௌனமாயிருந்தாள். அவள் குறித்துச் சொன்ன காரியம் இன்னதென்று எனக்கு நன்றாக விளங்கிற்று. அவள் உண்மைக்காகத் தன் தலை கொடுக்கச் சித்தமாயிருந்தாலும் எனக்கு என்ன பொல்லாங்கு விளையுமோவென்று மட்டும் ஆலோசிப்பதாகத் தெரிந்து கொண்டேன். ஞானாம்பாள் என்னிடத்தில் வைத்திருக்கிற அணைகடந்த அன்பின் நிமித்தம் அவள் பல சங்கடங்களுக்கு உட்பட்டிருப்பதை நினைக்கும்போது என் மனம் பதைத்து உலை மெழுகு போல் உருகிற்று. யாதொரு அபாயமுமில்லாமல் அவளை ரக்ஷிக்கவேண்டுமென்று அடிக்கடி நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

மறுநாட் காலையிலும் மந்திரி பிரதானி முதலிய சகல உத்தியோகஸ்தர்களும் ஊரிலுள்ள சகல பிரபுக்களும் அரண்மனையில் வந்து கூட்டங் கூடினார்கள். அவர்கள் ஞானாம்பாளைக் கண்டவுடனே ““மகாராஜாவே! நாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று கோயிலுக்குக் கோயில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய குலதெய்வம் இந்தக் காரியத்தை அகத்தியங் கூட்டி முடிக்குமென்று நிச்சயமாய் நம்பியிருக்கிறோம். அதற்குத் திருஷ்டாந்தமாக நாங்கள் வழியில் வரும்போது நல்ல நல்ல சகுனங்கள் கண்டோம். இந்தக் கலியாணம் முடியவேண்டுமென்று விரும்பாதவர்கள் ஒருவருமில்லை. அரைஞாண் கட்டின பிள்ளைகள் முதலாகச் சகலரும் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுடைய எண்ணத்துக்கு விரோதஞ் செய்ய மாட்டீர்களென்று நம்புகிறோம்”” என்றார்கள்.