உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயில்விழி மான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

7

சீனத்துருப்புகளுக்கு உணவாக அனுப்பி வந்தார்கள். ஆகவே நாங்கள் போன காரியம் என்னவோ, கை கூடவில்லை.

ஆயினும், எங்களுக்காக இந்திய சர்க்கார் செலவு செய்த பணம் வீணாகப் போய் விடக் கூடாது என்று எங்கள் கோஷ்டியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆராய்ச்சியில் ஈடுபடத் தீர்மானித்தார்கள். ஒருவர் மெக்ஸிகோவில் உள்ள முட்டையிடும் குதிரைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்குச் சென்றார். இன்னொருவர் பிரேஸில் தேசத்தில் பருத்திக் கொட்டைக்குப் பதிலாகக் காப்பிக் கொட்டை தின்று காப்பியாகவே கறக்கும் காளை மாடுகளைப் பற்றித் தெரிந்து வரச் சென்றார்.

நானும் பல யோசனைகள் செய்த பிறகு ஆஸ்திரேலியா தேசத்துக் கங்காருகளிடம் புதிதாகப் பரவி வரும் மர்ம நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தீர்மானித்து ஆகாய விமானத்தில் புறப்பட்டேன். ஆனால் கடவுளுடைய விருப்பம் வேறுவிதமாக இருந்தது. பழந்தமிழர் நாகரிகத்தைப் பற்றிய ஓர் அற்புதமான உண்மையை என் மூலமாக உலகத்துக்கு வெளிபடுத்த வேண்டுமென்பது இறைவனுடைய சித்தம். எனக்கு ஏதாவது திடீரென்று நேர்ந்து விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நேரில் பார்த்த அத்தகைய அற்புதம் ஒன்று இருந்ததற்குச் சாட்சியே இல்லாமற் போயிருக்கும். ஆகையினாலே தான் உம்மிடம் அதைப்பற்றிச் சொல்வதற்கு இவ்வளவு அவசரப்படுகிறேன்.