பக்கம்:மயில்விழி மான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மயில்விழி மான்

கூடிய மற்ற தொல்லைகளைப் பற்றியும் சிந்திக்கவில்லை. உடனே குதித்து எழுந்து நீலமணியை எடுத்துத் தோளின் மீது போட்டுக் கொண்டு புகை நெருப்பின் வழியாக வாசற் பக்கம் ஓடினேன். தயாராய் நின்ற வண்டியில் அவளைப் போட்டுவிட்டு நானும் ஏறிக்கொண்டேன். "ஓட்டு! ஓட்டு! டாக்டர் வீட்டுக்கு ஓட்டு!" என்று கத்தினேன்.

பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி டாக்டர் ராமசர்மாவின் வீட்டுவாசலில் போய் நின்றது. அந்த புண்ணியவான் - அவரைப் போல் தயாள குணமுள்ள டாக்டர் இப்போது யார் இருக்கிறார்கள்? - நீலமணியை வண்டிக்குள்ளேயே பார்த்துவிட்டு "நேரே ஆஸ்பத்திரிக்கு விடுங்கள்!" என்றார். அவரும் மோட்டாரில் இன்னொரு டாக்டரையும் நர்ஸையும் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். தீபாவளி ராத்திரியாயிற்றே என்று பாராமல் இரவெல்லாம் கண் விழித்து நீலமணிக்குச் சிகிச்சை செய்தார்கள்.

நான் உணர்ச்சியும் உயிரும் அற்றவனாக ஆஸ்பத்திரி வாசலிலேயே காத்திருந்தேன்.

"பிழைத்தால், புனர் ஜன்மந்தான்!" என்றார் டாக்டர். ஆனாலும் பிழைக்க வைத்துவிட்டார். ஒரு வாரத்துக்கெல்லாம் உயிருக்கு அபாயமில்லை என்று தெரிவித்தார்.

ஆயினும் ஆஸ்பத்திரியிலிருந்து நீலமணியை ஐயம்பேட்டைக்கு அழைத்துப் போவதற்கு ஆறுமாதம் ஆயிற்று.