பக்கம்:மயில்விழி மான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மயில்விழி மான்

"சில வருஷ காலம் பிரம்மஹத்தி பிடித்தவள் போல இருந்தாள். பிற்பாடு சங்கீதத்தில் கவனம் செலுத்தினாள். நல்ல திறமை பெற்றுவிட்டாள். ஆனால் வெளியில் வந்து பாடுவதில்லை. எப்படி வருவாள்? ரேடியோ என்பதாக ஒன்றைக் கண்டுபிடித்தார்களே, அந்தப் புண்ணியவான்கள் நன்றாயிருக்கவேணும்! சில சமயம் நல்ல சங்கீதத்துக்கும் ரேடியோவில் இடங் கொடுக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை போய் ரேடியோவில் கச்சேரி செய்து விட்டு வருகிறாள். சங்கீதம் ஒன்று தான் இப்போது அவளுக்கு ஜீவாதாரமாயிருந்து வருகிறது!" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"சங்கீதத்துடன் தங்களுடைய அன்பும் ஆதரவும் சேர்ந்திருக்கின்றன அல்லவா?" என்றேன் நான்.

"அடுத்தவாரத்தில் கூட நீலமணியின் ரேடியோக் கச்சேரி இருக்கிறது; முடிந்தால் கேளுங்கள்!" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"அவசியம் கேட்கிறேன். ஆனால் நீலமணிக்கு என்ன தான் நேர்ந்தது? அந்த முக்கியமான விஷயத்தை நீங்கள் சொல்லவில்லையே?" என்று கேட்டேன் நான்.

"தெரியவில்லையா, ஐயா! வேறு யாருடனும் அவள் நாடகமேடையில் ஏறி நடிக்கக் கூடாது என்பதற்காக அந்தச் சண்டாளப் பாவி அக்கினித் திராவகத்தை அவள் முகத்தில் ஊற்றிக் குரூபியாகச் செய்து விட்டான்! அவன் எப்பேர்ப்பட்ட ராட்சஸனாயிருக்கவேண்டும்? இவ்வுலகில் மனித உருக்கொண்ட