பக்கம்:மயில்விழி மான்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மயில்விழி மான்

"அம்மா! போன மாதம் எழுதிக் கொடுத்த நாவலுக்காக மூர் மார்க்கெட் கோவிந்தசாமி நாயுடு இன்று முப்பது ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அன்று காலை பத்து மணிக்கு ராஜகோபாலன் வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் இப்பொழுது குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து வெளிவருவதென்றால்? அதிலும், அவனுடைய தோற்றமோ மகாகோரமாக இருந்தது. முகத்திலே பிரேதக் களை; மேலெல்லாம் ஒரே புழுதியும் வியர்வையும். காலையில் அழகாக வகிடு பிளந்து படிய வாரிவிட்டிருந்த தலைமயிர் இப்பொழுது செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டதோடல்லாமல் அவனுடைய கைகளினாலும் வெகு வேதனையை, அடைந்திருக்க வேண்டுமென்று தோன்றியது.

அவனுடைய இந்தக் கோர ஸ்வரூபத்தைப் பார்க்க நமக்கே சகிக்கவில்லையென்றால், அவனுடைய தாயாராவது மனைவியாவது பார்க்கும் பட்சத்தில் மூர்ச்சை அடைந்து விடுவார்களென்று கூறுவது மிகையாகுமா?

ராஜகோபாலன் வெளியே வந்ததும் அங்கே வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நின்றுகொண்டிருந்த பஸ்களை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தான். பின்னர் அவ்வரிசையின் முதலில் ஜனங்கள் ஏறிக் கொண்டிருந்த பஸ்ஸை நோக்கி அதிவேகமாக விரைந்து சென்றான். அந்த பஸ்ஸுக்கு ஒருவர்