உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயில்விழி மான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மயில்விழி மான்

இரண்டு ஆசாமிகளையும் பார்த்தீர்களா, சார்? முகத்திலே ஈயாடவில்லை, பாருங்கள். இந்த மாதிரி ஆட்கள் தான் தூக்குப் போட்டுக் கொண்டும், விஷத்தைத் தின்றும் சாவது! இவர்கள் எல்லாம் ஏன் ஸார் வருகிறார்கள்?" என்றார்.

"ஆமாம்; ஒன்று நம்மைப் போல் நூறு, ஆயிரம் லட்சியமில்லாமலாவது இருக்கவேண்டும்; அல்லது சரியாய்க் கணக்குப் பார்த்து நிதானமாய் ஆடவேண்டும். இரண்டுங் கெட்டான் பேர்வழிகள் எல்லாம் வரக் கூடாது" என்றார் அவர் நண்பர்.

வண்டி பார்க் ஸ்டேஷனில் வந்து நின்றது. "என்னுடைய அறைக்கு வருகிறாயா?" என்று சீனு கேட்டான்.

"ஆமாம் வருகிறேன். இன்றிரவு அம்மாவின் முகத்தில் விழிக்க என்னால் முடியாது" என்றான் ராஜு.

இருவரும் இறங்கிச் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த சீனுவின் அறைக்குச் சென்றார்கள்.

நெருப்புப் பெட்டியைத் தேடி எடுத்து விளக்கேற்றி வைத்துவிட்டு, "உன்னை ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?" என்று சீனு கேட்டான்.

"ஏன்?"

"இன்றிரவு நான் தனியாயிருந்தால் ஏதாவது விபத்து நேருவது நிச்சயம். தூக்குப் போட்டுக் கொள்வேன்."