உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயில்விழி மான்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மயில்விழி மான்


நாடகத்தின் கதை என்னமோ சாமானியமானது தான். கதாநாயகன் சென்னையில் ஓர் அட்வொகேட். தொழில் ஆரம்பித்து இரண்டு வருஷந்தான் ஆயிற்று. "பிராக்டிஸ்" அதிகமில்லை. அவனுடைய மாமனார் (கதாநாயகியின் தந்தை) ஓர் எம்.எல்.சி. பெரிய இடங்களுக்கு அதிகம் வேண்டியவர். ஜில்லா முன்சீப் வேலைக்குக் கூடிய சீக்கிரம் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார்.

முதல் காட்சியில் கதாநாயகி "இந்த வருஷம் கோடைக்கு ஊட்டிக்குப் போகலாமா?" என்று கேட்கிறாள். தன் அருமை மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், பாங்கிக் கணக்கில் மூன்று கலமும் பூஜ்யமாயிருப்பதை எண்ணிக் கதாநாயகன் கலங்குகிறான். ஆயினும், அதை அவளிடம் சொல்லாமல் ஊட்டிக்குப் போகாததற்கு வேறு ஏதோ பொய்க் காரணம் கற்பித்துக் கூறுகிறான்.

இவ்வாறு நாடகமானது ஆரம்பத்திலேயே தொடங்கி ஜனங்களின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறது.

ஊட்டிக்குப் போகவேண்டும் என்னும் தன் மனைவியின் விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என்று கதாநாயகன் அல்லும் பகலும் அதே கவலையாக இருக்கையில், அவனுடைய நண்பன் ஒருவன் குதிரைப் பந்தயத்தைப் பற்றி அவனுக்குச் சொல்கிறான். அதில் பத்தாயிரம், லட்சம் என்று பணம் சம்பாதித்தவர்களைப் பற்றி அவன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கதாநாயகனுக்குப் பந்தயப் பைத்தியம்