பக்கம்:மயில்விழி மான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தப்பிலி கப்

129

கட்டாயம் 20,000 ரூபாய் கிடைக்கும். கவலையெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால், 2,000 ரூபாய்க்கு எங்கே போவது? இந்தச் சமயத்தில் அவனுடைய கட்சிக்காரன் ஒருவன் வந்து, கோர்ட்டில் கட்டுவதற்காக ரூ 2,000 கொடுக்கிறான். தான் படும் கஷ்டத்தைப் பார்த்துக் கடவுளேதான் இந்த ரூபாயை அனுப்பி இருக்கிறார் என்று கதாநாயகன் தீர்மானிக்கிறான்.

மறுநாள், சனிக்கிழமை. கிண்டிக்குப் போய்த் "தப்பிலி கப்" பந்தயத்தில் குறிப்பிட்ட குதிரையின் மேல் ரூபாய் 2,000மும் கட்டுகிறான். அவனுடைய குதிரை புறப்படும்பொழுது முதலில் புறப்படுகிறது. வரும்பொழுது கடைசியில் வருகின்றது. இடையில், ஜாக்கி அதைப் 'புல்' பண்ணிவிட்டான் என்பது கதாநாயகனின் கொள்கை.

இனிமேல் எவ்விதக் கவலையும் கிடையாது. செய்யத் தக்கது ஒன்றே ஒன்றுதான் பாக்கி இருந்தது. கதாநாயகன் தனியாகத் தனது அறையில் உட்கார்ந்து தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் ஆதியோடந்தமாக எல்லா விவரங்களையும் கூறுகிறான். கட்சிக்காரன் பணத்தை நாளைத் திங்கட்கிழமை கோர்ட்டில் கட்டாவிட்டால், துர்விநியோகம் செய்ததாய் ஏற்படும் என்றும், அட்வொகேட் தொழிலிருந்து தள்ளப்பட்டு அழியாத அவமானத்துக்கும் உள்ளாக வேண்டுமென்றும், அவளுடைய நகைகளை விற்றுக் கொடுப்பது ஒன்றுதான் வழி என்றும், அதைவிடத் தான் தூக்கு போட்டுக் கொண்டு இறப்பதே மேல் என்று தீர்மானித்துவிட்டதாகவும்