பக்கம்:மயில்விழி மான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

21

இருந்தது. திருநீர் மலையிலுள்ள குன்றை அதிலுள்ள கோயிலுடன் இங்கே யாரோ கொண்டு வந்து வைத்து விட்டதுபோல் இருந்தது. ஆனால் திருநீர் மலையில் உள்ளது பெருமாள் கோவில். இது முருகன் கோவில் என்று தெரிந்தது. கோவிலுக்கு எதிரே இருந்த ஸ்தம்பத்தில் கட்டிப் பறந்த சேவல் கொடியிலிருந்து அவ்விதம் ஊகித்துக் கொண்டேன்.

குன்றின் உச்சியிலிருந்த கோவிலுக்கு மூன்று புறத்திலும் மேடும் பள்ளமுமாகப் பாறைகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஒரு புள்ளிமான் துள்ளி ஓடிற்று. இன்னொரு பாறையில் ஒரு மயில் தோகையை விரிப்பதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது.

இவற்றின் மீதெல்லாம் என் கவனம் அதிகமாக நிற்கவில்லை. ஏனென்றால், இன்னொரு பாறையின் மீது, பூங்கொத்துக்கள் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு குட்டையான மரத்தின் அடியில், கதவைத் திறந்து பார்த்த அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் என் பக்கம் பார்க்கவில்லை. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்த திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அங்கே அப்போது இந்திரஜால மகேந்திர ஜாலங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நீல மேகங்களின் வரம்புகள் ஒரு நிமிஷம் பொன் வண்ணம் பெற்றுத் திகழ்ந்தன. அடுத்த நிமிஷம் நீலமேகங்கள் செந்தாமரை நிறமாக மாறின. பிறகு மேல் வானம் முழுவதும் தங்க நிறம் பெற்று ஒளிர்ந்தது. தங்க நிறம் உடனே ரத்தச் சிவப்பு நிறமாக மாறியது.