உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயில்விழி மான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

51

நாதஸ்வரக் கோஷ்டியார் நின்று வாசிக்க வேண்டும். அந்நாளில் கும்பகோணத்தாரின் சங்கீத ரஸனைக்கு இணையே கிடையாது போங்கள்! எவ்வளவோ அற்புதமாக முன்னலங்காரமும் பின்னலங்காரமும் செய்து முருகனை எழுந்தருளப் பண்ணுவார்கள். ஆனாலும், சுவாமி தரிசனம் செய்யும் கூட்டத்தைக் காட்டிலும் நாதஸ்வர கோஷ்டியைச் சூழ்ந்து நிற்கும் ஜனக் கூட்டந்தான் அதிகமாயிருக்கும்.

அன்றைக்கு இவ்வாறு ஒவ்வொரு பந்தலிலும் நின்று நின்று நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, கச்சேரியைத் தொடர்ந்து வந்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தேன். அந்த சிறு குழந்தை கூட்டத்தில் எப்படியோ புகுந்து அடித்துக் கொண்டு வந்து எல்லாருக்கும் முன்னால் வந்து நின்றது. இது என் கவனத்தைக் கவர்ந்தது. நாதஸ்வர இசையைக் கேட்டுக் கொண்டு, அந்தக் குழந்தை சில சமயம் பூரித்து மலர்ந்த முகத்துடனே காணப்படும். சில சமயம் தவுல் வாத்தியத்தில் கவனம் செலுத்திக் கையினால் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இன்னும் சில சமயம் மகுடி வாத்தியத்தைக் கேட்டு பாம்பு படம் எடுத்து ஆடுமே, அம்மாதிரி கண்களைப் பாதி மூடிக்கொண்டு, தலையை இலேசாக ஆட்டிக்கொண்டு நிற்கும். சில சமயங்களில் அதன் உடம்பு முழுவதுமே ஆடும். தாமரைக்குளத்தில் இலேசாகக் காற்றடிக்கும்போது பாதி மலர்ந்தும் மலராமலும் இருக்கும் தாமரைப் புஷ்பம் அதன் நீண்டு உயர்ந்த தண்டுடன் ஆடுமே, அந்தக் காட்சி எனக்கு நினைவு