உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயில்விழி மான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

57

யாய் இருந்தது. இந்த மட்டும், சீக்கிரத்தில் இறந்து போகப் போகிற ஓர் அநாதை ஸ்திரீக்கு இந்த உதவியாவது நம்மால் செய்ய முடிந்ததே என்று சந்தோஷப் பட்டேன். நீலமணி பக்கத்தில் உட்கார்ந்து வெகு சுவாரஸ்யமாக எங்கள் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தாள். விடைபெற்று புறப்படவேண்டிய சமயம் நெருங்கிய போது, நாஸுக்காக வீட்டுச் செலவு பற்றிக் கவலைப் படவேண்டாமென்றும் எனக்குத் தெரிந்த டாக்டரை அனுப்பி வைத்தியம் பார்க்கச் சொல்வதாகவும் கூறினேன். கடைசியாக, "அம்மா! நீ எவ்வளவோ நன்றாயிருந்தவள்; இப்போது இந்த கதிக்கு வந்து விட்டாய். ஆனாலும் இந்தக் குழந்தையைப் பிச்சை எடுக்கப் போகச் சொல்வதை மட்டும் நிறுத்தி விடு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு!" என்றேன்.

"நானா போகச் சொல்கிறேன், ஐயா! வேண்டாம் வேண்டாம் என்று தான் முட்டிக் கொள்கிறேன். கேட்காமல் போய்விடுகிறாள்!" என்று மரகதமணி கண்ணீர் ததும்பக் கூறினாள்.

அப்போது நீலமணி, "மாமா! நான் பிச்சை எடுக்கப் போவதாக யார் உங்களுக்குச் சொன்னார்கள்?" என்று கணீர் என்ற குரலில் கேட்டாள்.

நான் சிறிது திகைத்துப் போனேன். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பேச்சை எடுத்திருக்கக்கூடாது என்று எண்ணினேன்.