பக்கம்:மயில்விழி மான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

71

"நாளைக்குத்தானே, தம்பி நாடகம்? அதற்குள் ஸ்திரீ வேஷக்காரனுக்குச் சுரம் சரியாகிவிடுகிறது!" என்றேன்.

"அப்படித் தோன்றவில்லை, மாமா! நூற்றைந்து டிகிரி சுரம். மேடைக்கு வந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டால் என் கதி என்ன ஆகிறது?" என்றான்.

"அதுவும் ஒரு நடிப்பு என்று வைத்துக் கொள்கிறது" என்று சொல்லிவிட்டு நகைத்தேன்.

நமச்சிவாயத்துக்கு நகைப்பு உண்டாகவில்லை. அழுகையும் ஆத்திரமுந்தான் வந்தன.

அச்சமயத்தில் என் நாவில் எந்தக் குட்டிச்சாத்தான் வந்து உட்கார்ந்து கொண்டதோ, என்னமோ தெரியவில்லை.

"நம் நீலமணியை வேண்டுமானால் நடிக்கச் சொன்னால் போகிறது!" என்றேன்.

உடனே நமச்சிவாயத்தின் முகம் மலர்ந்தது; "தங்களிடம் அதைக் கேட்கலாமென்றுதான் வந்தேன்; ஆனால் கேட்பதற்கு என்னவோ தைரியம் வரவில்லை" என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தமாஷ் பேச்சு சில சமயம் எவ்வளவு இக்கட்டுகளில் கொண்டு வந்து விட்டு விடுகிறது!

திகம் வளர்த்துவதில் பயனில்லை, நமச்சிவாயம் தான் வந்த காரியத்தை நிறைவேற்றிக்