பக்கம்:மயில்விழி மான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மயில்விழி மான்

சில நாளைக்கெல்லாம் நமச்சிவாயத்துக்கு உடம்பு ரொம்ப பலவீனமாகிச் சுரமும் வந்து விட்டதாம். டாக்டரை அழைத்துப் பார்த்ததில் அவர் அந்தப் பயங்கரமான செய்தியைச் சொன்னாராம். பையனுக்கு டி.பி.வியாதி என்றும், உடனே நாடகம் ஆடுவதை நிறுத்தி பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், தகுந்த சிகிட்சையும் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிடில் வியாதி முற்றி உயிருக்கே அபாயம் வந்து விடும் என்று சொன்னாராம். அந்த நாளில் இப்போது வந்திருப்பது போன்ற 'ஸ்ட்ரெப்டோ மைஸின்' முதலிய மருந்துகள் இல்லை. டி.பி. வியாதி வந்து விட்டது என்றால் பிழைப்பது துர்லபம் என்று தான் அர்த்தம்.

ஆனால் நமச்சிவாயமோ டாக்டர் சொன்னதை நம்பாமல், 'எனக்கு டி.பி.யும் இல்லை; கி.பி.யும் இல்லை" என்று சொல்லி, மேடை ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தான். இதன் பலனாக, ஆளை அடியோடு கிழே தள்ளி விட்டது.

"மாமா உடனே புறப்பட்டு வாருங்கள்! தாமதித்தால் எங்களை உயிரோடு காணமாட்டீர்கள்!" என்று நீலமணி அலறிப் புடைத்துக் கொண்டு கடைசிக் கடிதத்தில் எழுதியிருந்தாள்.

நானும் அலறிப் புடைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனேன். அங்கே எல்லாம் அல்லோலகல்லோலமாகத்தான் இருந்தது. நாடகத்தை நிறுத்தி ஒருவாரம் ஆயிற்று. நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள்